`ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றும்வரை என் போராட்டம் ஓயாது!’ - கௌசல்யா

உடுமலை சங்கர் படுகொலை வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, இன்றைய தினம் மீண்டும் கொமரலிங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கெளசல்யா மற்றும் 'எவிடென்ஸ்' கதிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

அப்போது பேசிய கெளசல்யா, ``சங்கர் படுகொலை செய்யப்பட்ட பிறகு இன்றுவரை ஒரு பயத்துடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும்தான் இருந்து வருகிறேன். எனக்குத் திருமணம் நடந்து 8 மாதங்கள் கழித்தும்கூட என் கணவரைக் கொலை செய்யத் துணிந்தவர்கள், இந்த விடுதலைக்குப் பிறகு இன்னும் என்ன செய்யலாம் என்றுதான் யோசித்துக்கொண்டு இருப்பார்கள். எனவே எனக்கும், நான் சார்ந்த குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மரண தண்டனை என்பது ஆணவக் கொலை செய்ய நினைப்பவர்களுக்கு, ஒரு மனத்தடையை உண்டாக்கும். இப்போது சாதியம்குறித்து தொடர்ந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறேன்.

அதேபோல ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றும்வரை நான் போராடுவேன். தற்போது சங்கர் தனிப்பயிற்சி மையம் நடத்தி வருகிறேன். அதில் எங்கள் பிள்ளைகளின் கல்விக்கான வழிகாட்டலைக் கொடுக்கிறேன். சாதியத்தின் கொடூரத்தைப் பற்றி குழந்தைகளிடம் எடுத்துரைத்து, அதன் கேவலங்களை நான் உணர வைக்கிறேன். வேர் சரியாக இருந்தால்தான் மரம் நன்றாக வளரும். அந்த வேருக்கான நீரை, சங்கர் தனிப் பயிற்சி மையம் ஊற்றி வருகிறது. சாதிய அமைப்புகளுக்கு எதிராக என்னுடைய போராட்டம் தொடரும். என்னுடைய உயிர் உள்ளவரை சாதி ஒழிப்பு குறித்துப் பேசுவேன். ஆனால், திட்டமிட்டே எனக்கு எதிரான கருத்துகளைப் பரப்ப நினைக்கும் சாதிய சிந்தனை கொண்டவர்கள், சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி தவறாகச் சித்திரித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் மனநோயாளிகள். அவர்கள் அனைவரும் சாதிய சிந்தனைகளில் இருந்தே என்னை அணுகுகிறார்கள். என்னுடைய இடத்தில் இருந்து யாரும் யோசிப்பதில்லை. சங்கரின் தம்பிகளுடன் நான் இருக்கும் படங்களை ஏன் தவறாக உருவகப்படுத்துகிறார்கள்?" என்றார்.  

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு தூக்குத்தண்டனையும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் மற்றும் ஒருவருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!