வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (15/12/2017)

கடைசி தொடர்பு:17:01 (15/12/2017)

கோவையை அதகளப்படுத்திய ராஜஸ்தான் கொள்ளையர்கள்! - ‘தீரன்’ பட பாணியில் வலைவிரித்த போலீஸ்

கோவையில் சமீப நாளாக நடந்துவரும் தொடர் ஏ.டி.எம் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் காவல்துறைக்கு தலைவலியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

கொள்ளையடிக்கப்பட்ட ஏ.டி.எம்

கடந்த 24 நாள்களில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. கொள்ளையர்களைப் பிடிக்க ‘தீரன்’ பட பாணியில் களம் இறங்கியுள்ளது கோவை போலீஸ் 

சம்பவம் 1:  நவம்பர் 18ம்தேதி, கோவை காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மெஷினை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க சில மர்ம நபர்கள் முயன்றிருக்கிறார்கள். சத்தம் கேட்டு அருகில் உள்ள கட்டடத்தின் வாட்ச் மேன் ஓடிவர, ஆயுதங்களை அங்கேயே விட்டுவிட்டு ஏ.டி.எம் கொள்ளையர்கள் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

சம்பவம் 2 : நவம்பர் 29-ம் தேதி, கோவை கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் ஏ.டி.எம் மையத்தில் புகுந்த கொள்ளையர்கள் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். எசக்குப் பிசக்காக ஏதோ செய்ய, ஏ.டி.எம் ல் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அலறியிருக்கிறது. பயங்கர சத்தத்தால் பயந்துபோன கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள்.

சம்பவம் 3: கடந்த  டிசம்பர் 1ம் தேதி, கோவை சுந்தராபுரத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற உடுமலைபேட்டையைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

சம்பவம் 4:  கடந்த  9-ம்தேதி, கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியின்  ஏ.டி.எம்மிற்குள் புகுந்த மர்ம கொள்ளையர்கள் ஏ.டி.எம் மெஷினை உடைத்து,  ரூபாய் 3.35 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

சம்பவம் 5:  கடந்த 10ம் தேதி, அதாவது நேற்று முன்தினம் பீளமேட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்-ல் நுழைந்த கொள்ளைக் கும்பல் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் ஸ்ப்ரே அடித்து மறைத்துவிட்டு,  கேஸ் கட்டிங் மெஷின் மூலம் ஏ.டி.எம் மெஷினை உடைத்து பணத்தை எடுக்க  முயற்சி செய்திருக்கிறார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் மெஷினை உடைக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த 3 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.

சம்பவம் 6 :  நேற்றைய தினம் ( 11-ம்தேதி) கோவை டைடல் பார்க் அருகே உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்மிற்குள் புகுந்த கொள்ளையர்கள்  மெஷினை  உடைத்து, அதிலிருந்த  20 லட்சம் ரூபாயை அபேஸ் செய்துள்ளனர். அந்தத் தகவல் பல மணி நேரம் கழித்தே போலீஸுக்குத் தெரிந்துள்ளது. 

கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யா

அடுத்தடுத்த நாள்களில் நடந்த இந்த ஆறு ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவங்கள் கோவையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாது வங்கிகளும் இந்தக் கொள்ளைச் சம்பவங்களால் நடுங்கிப்போய் கிடந்தார்கள். பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் இருக்கும் ஏ.டி.எம் மையங்களை மூடுவதற்கு ஆலோசித்து வருவதாகவும் வங்கிவட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  

இதற்கிடையே, இந்த ஏ.டி.எம் கொள்ளையர்களைப் பிடிக்க கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யா ஏழு  தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை நடத்தி தற்போது அவர்களைப் பிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,  "இதே போன்ற தொடர் ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவம் கடந்த மாதம் கர்நாடகாவில் நடந்திருக்கிறது. கேஸ்கட்டிங் மெஷின் பயன்படுத்திருப்பது, கேமராவில் ஸ்ப்ரே அடித்திருப்பது உள்ளிட்ட  கொள்ளையர்களின் டெக்னிக்குகளை வைத்துப் பார்த்தபோது,  கர்நாடகாவில் கைவரிசை காட்டிய  கொள்ளையர்கள்தாம் கோவையிலும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்தது. அந்த வழக்குகளையும் ஒப்பிட்டுத் தீவிரமாகத் தேடுதல் வேட்டையை நடத்திய நிலையில் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளார்கள். அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.

“இன்னொரு ஏ.டி.எம் கொள்ளைபோகக் கூடாது என்பதற்காகவும் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி அனைத்து ஏம்.டி.எம்-களிலும் கட்டாயமாக செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட இருக்கிறோம். அதுமட்டுமல்லாது, அனைத்து ஏ.டி.எம்களிலும்  உள்ள சி.சி.டி.வி கேமராக்களை கோவை மாநகரக் காவல்துறை கண்காணிப்பாளர் அறையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இணைத்துக் கண்காணிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


டிரெண்டிங் @ விகடன்