வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (15/12/2017)

கடைசி தொடர்பு:17:15 (15/12/2017)

கம்பீரமாக நிற்கும் 60 ஆண்டு பாலம்; சிதைந்துக்கிடக்கும் 5 ஆண்டு பாலம்! அச்சத்தில் வாகன ஓட்டிகள் 

நான்கு வழிச்சாலையான இது நெல்லை - தூத்துக்குடி நகரங்களை இணைக்கிறது. இந்த நகரங்களுக்கிடையே பெருகிவரும் வாகனப் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியானது தொடங்கப்பட்டு 2012-ம் ஆண்டு நிறைவுபெற்று போக்குவரத்துக்காகத் திறந்துவிடப்பட்டது. நெல்லை - தூத்துக்குடி நகரங்களுக்கிடையே வல்லநாடு என்ற ஊருக்கு அருகில் தாமிரபரணி ஆறு ஓடுவதால் நெடுஞ்சாலைப் பணிக்கு ஈடுகொடுக்கும் விதமாக ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு 2003-ம் ஆண்டு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனால் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.25 கோடி மதிப்பீட்டில் 400 மீட்டர் நீளத்துக்கு 16 பில்லர்கள் அமைப்பதற்கான திட்டம் போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

 

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தப் பாலப்பணியானது, இடையில் ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட பிரச்னைகளால் இரண்டுமுறை நிறுத்திவைக்கப்பட்டு பின்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 2012-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி போக்குவரத்துத் தொடங்கியது. இந்தப் புதிய பாலமானது இயற்கை பேரழிவான நிலநடுக்கம், தாமிரபரணி ஆற்றின் வெள்ளக்காலங்களில் ஏற்படும் மண் அரிப்பு ஆகியவற்றால் பாதிப்படையாத வகையிலும், 160 டன் எடை கொண்ட கனரக வாகனங்களை தாங்கும் பலத்துடன், 100 ஆண்டுகள் உத்தரவாதம் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய பாலத்தின் திறப்பு விழாவின்போது பேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் உத்தரவாதம் கொடுத்த ஐந்தே ஆண்டுகளில், சென்ற மாதம் 16-ம் தேதி ஒரு பாலத்தில் பத்தடி தூரத்துக்கு கான்கிரீட் பாலங்களில் விரிசல் ஏற்பட்டு ஓட்டை விழுந்துள்ளது மக்களுக்கும் நெடுஞ்சாலை துறையினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டு, மற்றொரு புதிய ஒருவழிப் பாலத்தின் குறுக்கே தடைகள் வைக்கப்பட்டு அதன் இரு புறங்களிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

நம்நாட்டில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, சிறிய முதல் பெரிய பாலங்கள் வரை 1,000-க்கும் மேல் இருக்கின்றன. அவற்றில் கட்டிய ஐந்தே ஆண்டுகளில் பாலம் உடைந்துள்ளது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. பாலத்தில் ஓட்டை விழுந்த அடுத்த சில நாள்களுக்கு யானை வேகத்தில் நடைபெற்றுவந்த சீரமைப்புப் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வுப்பணியை மேற்கொண்டனர். அப்போது பேசிய அதிகாரிகள், சென்னை ஐ.ஐ.டி-யிலிருந்தும் டெல்லி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திலிருந்தும் பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விரிவான அறிக்கை தயாரிக்க உள்ளதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஆமை வேகத்தில் நடைபெற்றுவந்தப் பணிகளானது தற்போது நத்தை வேகத்தில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்கிருந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "நெல்லை,குமரி மற்றும் அதை சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களை தூத்துக்குடி துறைமுகத்தோடு இணைக்கும் பிரதான சாலையாக இது இருப்பதால் கனரக வாகனங்கள் பெருமளவில் இந்தப் பாலத்தின் வழியாகச் செல்கிறது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகளைத் தாங்காமல் இந்த ஓட்டை விழுந்திருக்கும். சீரமைப்புப் பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும்” என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார். 

இந்தப் பதிலை வைத்துக்கொண்டு அப்பகுதி மக்களிடமும் வாகன ஓட்டிகளிடமும் கேட்டபோது, “இப்போது உடைந்துள்ள பாலத்துக்கு பக்கத்தில் ஆங்கிலேயர் காலத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1950-ம் ஆண்டு திறக்கப்பட்டு தற்போது பயன்பாடு இல்லாமல் இருக்கும் பழைய பாலமானது 60 ஆண்டுகள் கடந்தும் உறுதியோடு நிற்கும்போது, கட்டப்பட்ட ஐந்தே ஆண்டில் இந்தப் புதிய பாலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது. ஒருவழிப் பாலத்தின் வழியே கனரக வாகனங்கள் செல்லும் போதே இந்த நிலைமை. தற்போது மற்றொரு ஒருவழிப் பாலத்தின் இரு புறங்களிலும் கனரக வாகனங்கள் செல்கிறது. இந்த மற்றொரு பாலத்திலும் ஏகப்பட்ட விரிசல்கள் காணப்படுகிறது. இதுவும் உறுதியுடன்தான் இருக்கும் என்பதற்கு என்ன நிச்சயம். இதில் இரவில் வாகனங்களை ஓட்டுவதற்கே கொஞ்சம் பயமாக உள்ளது. இந்த லட்சணத்தில் அங்குள்ள சுங்கச்சாவடியில் ரூ.100 தண்டத்துக்கு வாங்கிக்கொள்கின்றனர்” என்று ஆதங்கப்பட்டனர். 


மேலும் சிலர் கூறும்போது, “பராமரிப்பு இவ்வளவு மோசமாக இருக்கும் பட்சத்தில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். கம்பீரமாக நிற்கும் பழைய பாலத்தை சரியாகப் பராமரித்து அதிலும் போக்குவரத்து நடக்கும்படி செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தனர்.

வாகன ஓட்டிகளின் அச்சத்தைப் போக்குமா நெடுஞ்சாலைத்துறை?