அடுத்தடுத்த 3 கடைகளில் திருட்டு! பெரம்பலூர் மக்களை அச்சுறுத்தும் கொள்ளையர்கள்

பெரம்பலூரில் ஒரே நேரத்தில் மூன்று கடைகளின் பூட்டை உடைத்துப் பணம் திருடிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

                       

பெரம்பலூர் மாவட்டம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன். இவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையைப் பூட்டிவிட்டு சென்ற அவர், நேற்று காலை கடையைத் திறக்க வந்தார். அப்போது கடை ஷட்டரின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடை உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.12,500 திருடு போயிருப்பது தெரியவந்தது.  

அதேபோல, அந்தக் கடையின் அருகேயுள்ள ஆயில் கேன்கள் விற்கும் கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த ரூ.1,500 ரொக்கம் திருடு போயிருந்தது. மேலும் அருகில் உள்ள பழைய டயர்கள் விற்கும் நாகராஜ் என்பவரின் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து வெங்கடகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிந்து, அங்குள்ள ஒரு கடையின் கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் பல இடங்களில் கொலை, கொள்ளைச் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதற்கு முன்புகூட மதனகோலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது காரை வீட்டின் எதிரில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றிருக்கிறார். காலையில் வந்து பார்த்தபோது காரின் வீலை ஜாக்கி வைத்து ஒவ்வொரு வீலாக கழற்றி ஒவ்வொரு டயர்களிலும் கல், பேட்டிரி பாக்ஸ், செங்கலை முட்டுக்கொடுத்துவிட்டு சர்வ சாதாரணமாக நான்கு டயர்களையும் கழட்டிச் சென்றார்கள். இது நகரின் மையப் பகுதியிலேயே திருடர்கள் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டத் திருடர்களை இன்று வரையிலும் பிடிக்க முடியாமல் திணறி வருகிறது காவல்துறை. கடையின் பூட்டை உடைத்துத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை எப்படிப் பிடிக்கப் போகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!