கெட்டிச்சட்னி... இட்லி... பொங்கல்! - பிக்னிக் ஸ்பாட்டாக மாறிய போராட்டக்களம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய காத்திருப்புப் போராட்டத்தைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று தொடங்கினர். அந்த வகையில் புதுக்கோட்டை நகரத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் இந்த உள்ளிருப்புப் போராட்டம் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கலந்துகொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் கோரிக்கைகள், தீர்மானங்கள், ஊழியர்களின் பிரச்னைகள் என்று பல தீவிரமான விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும் கலகலப்புக்கும் குறைவில்லை.

அதிகாலையில் சுடச்சுட இஞ்சி டீ, காலையில் கெட்டிச்சட்னி, சாம்பாருடன் ஆவி பறக்கும் இட்லி மற்றும் பொங்கல், மதியம் அப்பளம் வடை கூட்டுப் பொரியலுடன் அன்லிமிடெட் சாப்பாடு, மாலை மீண்டும் இஞ்சி டீ, இரவு வழக்கமான சிற்றுண்டி என்று ஜாலியான பிக்னிக் ஸ்பாட்போல் போராட்டக்களம் களைகட்டுகிறது. போராட்டப் பந்தலில் தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்கள் சூடாகப் பேசிக்கொண்டிருக்க, அதன் அருகிலேயே நளபாகம் சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்தது. போராட்டத்தில் கலந்துகொள்ளும் தொழிலாளர்களில் நன்றாகச் சமைக்கத் தெரிந்தவர்களைக் கொண்டு இந்தச் சமையல் பணிகள் நடந்துகொண்டிருந்தன.

வேலுச்சாமிதொழிலாளர்களோடு அமர்ந்து சாப்பிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ``சாப்பாடு பிரமாதம். பாயசம் வைத்திருந்தால் கல்யாணவீட்டுச் சாப்பாடுபோலவே இருந்திருக்கும்" என்று வாயார பாராட்டிச் சென்றிருக்கிறார்கள். இந்தக் காத்திருப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தொ.மு.ச பொதுச் செயலாளரான வேலுச்சாமி, "போக்குவரத்துக் கழகங்கள் சேவைத் துறையாகச் செயல்பட்டு வருவதால், நிதி பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று அதிகாரிகளும் போக்குவரத்துத்துறை அமைச்சரும் கூறிக்கொண்டிருந்தால் போதாது. வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசாங்கமே பொறுப்பேற்று, நிதி வழங்க வேண்டும் என்று நாங்கள் போராடினோம். உடனே இந்த அரசு, அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட, தொழிலாளர்களுடைய சேமிப்பு, ஓய்வுக்காலப் பயன்களிலிருந்து 7,000 கோடி ரூபாயை எடுத்துச் செலவு செய்துள்ளது. இதனால் ஓய்வு பெறும் பல்லாயிரக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், மீனவர்கள் நிலையைப்போல எங்களின் நிலைமையும் மாறி இருக்கிறது" என்றார்.

கூட்டத்தில் பேசிய மற்ற பொறுப்பாளர்களும், "எங்கள் போராட்டத்தை அரசு அலட்சியப்படுத்தினால், இதைத் தீவிரப்படுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, எங்களது கோரிக்கைகளை ஏற்று, அரசு உடனடியாகத்  தீர்வுகாண வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தனர். போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!