வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (15/12/2017)

கடைசி தொடர்பு:17:23 (15/12/2017)

“எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதையை எடப்பாடி பழனிசாமி அரசு எங்களுக்குக் கொடுக்கவில்லை!” - கொதிக்கும் போலீஸார்

“தமிழகக் காவல்துறையினரின் நலன்களைப் பாதுகாக்க, ஏற்கெனவே முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் செய்ததை இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்யத் தவறிவிட்டார்” என்கிற குற்றச்சாட்டு, போலீஸார் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

போலீசாருக்கு மதிப்பளித்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

இதுகுறித்து விவாதித்துவரும் போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம்.“சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன், ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்று, அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகரும் கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்திருக்கிறார். பெரிய பாண்டியனின் உடல், உடற்கூறு ஆய்வு முடித்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், போலீஸ் டி.ஜி.பி-யும் அஞ்சலி செலுத்தினார்கள். 

மறைந்த எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தர்மபுரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த பழனிசாமி, நக்சலைட் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். உடற்கூறு ஆய்வு முடிந்ததிலிருந்து அவரின் இறுதி ஊர்வலம்வரை எம்.ஜி.ஆர். பங்கேற்று, இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்றார். இதுபோன்ற வீர மரணங்களுக்கு, அரசு சார்பில் 'இரங்கல்' என்ற வார்த்தையும் அப்போதுதான், முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. ராணுவத்தினர் போன்று ஒரு மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறைதான் என்பதை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உணர்ந்து, அதற்குரிய மரியாதையைச் செய்தனர்.எம்.ஜி.ஆரைப் போலவே, பின்னர் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் போலீஸாரின் தியாகங்களுக்கு மிகுந்த மதிப்பளித்தார். தர்மபுரி - ஓசூர் எல்லையில் கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியின்போது, கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமி விஷயத்தில், ஜெயலலிதாவின் இரங்கல் அறிக்கையில் அதைக் காணமுடிந்தது. காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடர்பான அரசின் விதிமுறைகளை மாற்றியமைக்க உத்தரவிட்டு, மரணமடைந்த தலைமைக்காவலரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். உயிரிழந்த முனுசாமியின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், முனுசாமியின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் உத்தரவிட்டார் ஜெயலலிதா.                                                                 

                   முதல்வர் எடப்பாடி துணை முதல்வர் ஓ.பி.எஸ்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, ராஜஸ்தானில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியின் உடலுக்கு சென்னை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தியதோடு முடித்துக் கொண்டுள்ளார். தலைமைக் காவலர் முனுசாமிக்கு வழங்கிய ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையையே இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணி ஓய்வடையும்நிலையில் எஸ்.பி. அந்தஸ்து வரை செல்லக்கூடியவருக்கும், தலைமைக் காவலருக்கும் ஒரே அளவுகோல் வைத்திருக்கிறார் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. குறைந்தது மூன்று கோடி ரூபாயாவது பெரிய பாண்டியனின் குடும்பத்துக்குச் செய்யும் மரியாதையாகும் என்பதை காவல்துறை  உயரதிகாரிகள், முதல்வருக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பழனிசாமி குடும்பத்துக்கு, தமிழகக் காவல்துறையினரின் ஒருநாள் சம்பளத்தை ஒருங்கிணைத்து, அன்றைய காவல் உயரதிகாரி வால்டர் தேவாரம், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை வழங்கினார். அதுபோன்றதொரு முயற்சியைத் தற்போது தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

வீரமரணம் அடைந்திருக்கும் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனுக்கு உயரிய விருதான 'பரம்வீர் சக்ரா' விருது வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். அந்த விருதின் மூலம் அவருடைய குடும்பத்தார் பல்வேறு அரசு சலுகைகளைப் பெற முடியும். அதேபோல், பட்டப்படிப்பு படித்து வரும் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் மூத்த மகனுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதைவிட, அவரின் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணியை வழங்கும் அரசாணையை முன்கூட்டியே வெளியிட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் 'இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க நெல்லை மாவட்டத்துக்கு முதல்வர் வரவில்லை' என்ற குறையை இந்த அறிவிப்பு தீர்த்து வைக்கும்" என்கின்றனர் போலீஸார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டிப்பதாகவும், அவரின் அடியொற்றி எம்.ஜி.ஆர். நூற்றாண்டை தமிழகம் முழுவதும் நடத்திவருவதாகவும் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்களின் உள்ளக் குமுறல்களைக் கவனத்தில் கொள்வாரா என்பதே போலீஸாரின் எதிர்பார்ப்பு.


டிரெண்டிங் @ விகடன்