வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (15/12/2017)

கடைசி தொடர்பு:12:21 (16/12/2017)

“முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!” - இது யானையின் முன்னோர்களுக்கும் பொருந்தும்

“ஊருக்குள் நுழைந்த காட்டு யானை… காட்டு யானைகள் அட்டகாசம்… காட்டு யானைகள் நடமாட்டம்…” போன்ற செய்திகள் அன்றாடம் அட்டெண்டன்ஸ் போடும் விஷயமாகிவிட்டன. ஒரு 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு நமது உலகத்தை, ரீவைண்ட் செய்து பார்த்தால், இதுபோன்ற செய்திகள் தென்படுவது மிகவும் அரிது. அப்போதெல்லாம் அட்டகாசம் செய்யாத யானைகள், இப்போது மட்டும் எப்படி அட்டகாசம் செய்யும்? மனிதர்கள் வேண்டுமானால் ட்ரண்டுக்கு தகுந்தது போல மாறிவிடுவோம். ஆனால், வனவிலங்குகள் அப்படி இல்லையே?

யானை

இங்கு பிரச்னை யானைகள் அல்ல. அட்டகாசம் செய்வது எல்லாம் மனிதர்கள்தாம். முன்னேற்றம் என்ற பெயரில், நமது ஆசைக்காக நிலங்களை மாற்றியதற்கு கிடைத்த பலன் இது. யானைகள் நடமாட்டம் குறித்து அதிக செய்திகள் வருவது கோவை மாவட்டத்தில் இருந்துதான். மலைகளாலும், மரங்களாலும் போர்த்தப்பட்டிருந்த நகரம், தற்போது கட்டடங்களால் போர்த்தப்பட்டு வருகிறது.

 வனம் சந்திரசேகர்இது குறித்து வனம் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவின் நிறுவனர் வனம் சந்திரசேகர் கூறுகையில், “யானைங்க, இப்பவும் காட்டுலதான் இருக்கு. அது ஊருக்குள்ள வருதுனு வெளியாகறதெல்லாம் பொய்யான தகவல். காடுகள நாம அழிச்சுட்டோம். அகதிகளாகவும், வெளி மாநிலத்துல இருந்து வரவங்களுக்கும் அரசு, வனப்பகுதிகள்ல பட்டா போட்டு கொடுத்தது. அவங்க கொஞ்ச நாள் கழிச்சு, அத வெளியாட்களுக்கு வித்தறாங்க. அதேபோல, அரசியல் கட்சிக்காரங்களுக்கும், வனத்துறைக்கும் இதுல பெரிய பங்கு இருக்கு.

கோவை மாவட்டத்த சுத்தியுள்ள, வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுருக்கு. யானையோட, டி.என்.ஏ-விலேயே அதோட முன்னோர்கள் நடமாடிய இடங்கள் குறித்த தகவல் இருக்கும். அந்தத் தகவல வெச்சுதான் யானைங்க நடமாடும். அந்தப் பகுதிய எல்லாம் நாம ஆக்கிரமிச்ருக்கோம். கேரளா, கர்நாடகா, பீஹார், ராஜஸ்தான் போன்ற நாட்டுக்காரங்க எல்லா, கோவை, நீலகிரி மாவட்டத்துல அதிகளவு வசிக்கிறாங்க.

சோலைக்காடுகளா இருந்த இடமெல்லாம் தேயிலையாவும், காபி கொட்டையாவும் மாறினப்பவே பிரச்னை தொடங்கிருச்சு. இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் இது எல்லாம் வெள்ளக்காரங்க கொண்டுவந்தது. BPCங்கறது IPC னு மாறிருக்கு வேற எதுவுமே மாறல. வனப்பகுதிங்கள ஒட்டியுள்ள விவசாயிகள் முடிஞ்ச அளவுக்கு இயற்கை வழி விவசாயத்தை பின்பற்றணும். பாஸ்பரஸ், பொட்டாசியம், யூரியா, உப்பு ஆகியவற்றை 25 கி.மீக்கு முன்னாடியே ஸ்மெல் பண்ற உணர்வு யானைக்கு இருக்கு.

யானை

செயற்கை முறைல விளையற பொருள்கள சாப்பிடுவதால, யானைங்க குடல்லயும் புண் ஏற்படுது. கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள்ள வனப்பகுதில ரிசார்ட் தொடங்க முடியாது. அதனால, அந்த மாநிலத்துக்காரங்க எல்லா, இங்க ரிசார்ட் தொடங்கறாங்க. இந்த ரிசார்ட்ல எல்லாம் தண்ணீ அடிக்கலாம். ஃபயர் கேம்ப் போட்டுக்கலாம். வனத்தைப் பாதுகாக்கறோம்ணு சொல்ற ஆள்களே ரிசார்ட் வெச்சுருக்காங்க. இது எல்லாத்துக்கும் வனத்துறையும் உடந்தை.

நீர் நிலைகளை அழிப்பது, மலைய உடைச்சு எம்- சாண்ட் மணல் தயாரிப்பது போன்ற பிரச்னைங்களும் இருக்கு. ரிசார்ட்டுக்கு அனுமதி வழங்கறத நிறுத்தணும். ஜே.சி.பி, பொக்லைன்கள், ரிஜ்ஜூ, வண்டிகளை வனப்பகுதிக்குள்ள இயக்கக் கூடாது. அகழிங்கள தோண்டக் கூடாது". என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன்ராஜ் கூறுகையில், "முன்பு யானை வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு இல்லை. அங்கெல்லாம் அமைதியான சூழல் நிலவி வந்தது. தற்போது. யானை வாழ்விடங்களை ஒட்டி, கட்டடங்கள், மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கோவையைப் பொறுத்தவரை ஒவ்வொரு பகுதிகளிலும், ஒவ்வொரு மாதிரியான சூழல் நிலவுகிறது.

மோகன்ராஜ்

பல கல்வி நிறுவனங்கள், குவாரிகள் யானைகளுக்குப் பெரிய எதிரிகளாக உள்ளன. மின்சார வேலிகள் அமைப்பது, வெடிவெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மலைப்பகுதிகளுக்குச் சாலை போட்டுவிட்டோம். வனப்பகுதிகளை ஒட்டி, வாகனப் போக்குவரத்து அதிகரித்துவிட்டது. அதேபோல, ரயில் போக்குவரத்தும் அதிகரித்துவிட்டது. முன்பு 30 ரயில்கள் போய்வந்தது, தற்போது 70 ஆக மாறிவிட்டன. அப்போது காலியாக இருந்த இடங்களில் எல்லாம், இப்போது பட்டா கொடுத்து பெறுநிறுவனங்களாக ஆக்கிவிட்டனர். இதெல்லாம் யானைக்குத் தெரியாது. அப்போதுமே, நாம் வாழ்ந்த பகுதிகளுக்கு அருகே யானை இருக்கும். ஆனால், அது எப்போது வரும் போகும் என்று தெரிந்து மக்கள் வாழ்ந்துவந்தனர். வனவிலங்குகள் நடமாடும் பகுதி என்று யோசித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

வனத்தை காக்க வேண்டிய வனத்துறை, அதில் உள்ள பிரச்னைகள் குறித்தே பேசுவதில்லை. வனத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இடைத்தாங்கல் மண்டலம் (Buffer Zone) அமைத்து பராமரிக்க வேண்டும். பெறு நிறுவனங்கள் எழுப்பும் கட்டடங்களால், பாதிக்கப்படுவது எளிய மக்கள்தான். யானை வரும்போது அந்த முதலாளிகள் இருப்பதில்லை, எளிய மனிதர்கள்தான் அங்கு எப்போதும் இருப்பார்கள். கோவை குருடம்பாளையம் அருகே உள்ள சி.ஆர்.பி.எஃப் கட்டடமே, யானை நடமாடும் பகுதிகளை மறித்துதான் கட்டப்பட்டுள்ளது.

யானை


ஹாகா என்றழைக்கப்படும் மலைப்பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் (Hill Area Conservation Authority) கடந்த 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர்தான், இந்த ஆணையத்துக்குத் தலைவர். இவர்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றுவிட்டுததான், மலைப்பகுதிகளில் எந்த ஒரு கட்டுமானத்தையும் கட்ட முடியும். அரசாணைப்படி, அந்தப் பகுதிகளில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுச்சூழல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், 27 ஆண்டுகளாக இவர்கள் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. இவர்கள் தங்களதுப் பணிகளைச் செய்திருந்தாலே பிரச்னை இல்லை. தற்போதைய சூழ்நிலைக்கு மனித-விலங்கு மோதல் மேலும் அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளது" என்றார்.

யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்கிறது என்று மனிதர்கள சொல்வதுபோல, மனிதர்கள் செய்யும் அட்டகாசங்களையெல்லாம் யானைகள் சொல்ல ஆரம்பித்தால், இங்கு பெரும்பாலானோர் குற்றவாளி கூண்டில்தான் நிற்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்