வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (15/12/2017)

கடைசி தொடர்பு:18:52 (15/12/2017)

போர்க்களமான சென்னைப் பல்லவன் சாலை! 

போராட்டம்

தமிழகப் போக்குவரத்து பணிமனைகளின் தலைமையகமான பல்லவன் இல்லம் இன்று மாலை தொழிலாளர்கள் போராட்டத்தால் போர்க்களமானது. 


ஊதிய உயர்வு, பணியின்போது உயிரிழக்கும் பணியாளர்களுக்கு நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னைப் பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். சி.ஐ.டி.யு, எல்.டி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்குகொண்டன. தொழிலாளர்கள் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்


தொழிற்சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர், மாலையில் போராட்டத்தைக் கைவிடுவதாகத் தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால், இதைப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த தொழிலாளர்களில் ஒருபிரிவினர் ஏற்கவில்லை. தொழிற்சங்கத்தினர் தீர்மானத்தை வாசிக்க முயன்றனர். ஒருபிரிவினர்  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கோஷம் எழுப்பினார்கள். இதனால் தீர்மானத்தைத் தொடர்ந்து படிக்க முடியாத சூழல் உருவானது.

போராட்டம்


இதற்கிடையே, ஒருபிரிவினர் ரகளையில் ஈடுபடத் தொடங்கினர். போராட்டக்களத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை அடித்து நொறுக்கினார்கள். அந்தப் பகுதி வழியாக வந்த பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் சில பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. அந்தப் பகுதியே போர்க்களம்போல காட்சி அளித்தது. இதையடுத்து அந்தப் பகுதி வழியாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரகளையைத் தடுக்க முயன்ற காவலர்களுடனும் தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.