வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (15/12/2017)

கடைசி தொடர்பு:20:35 (15/12/2017)

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைக் காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நாகை மாவட்டம் சீர்காழியில்  மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

சீர்காழி பழைய பேருந்துநிலையம் அருகில் இன்று காலை 11.00 மணியளவில் மீனவ இளைஞர்கள் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைக் காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, ஒகி புயலால் மாயமான தமிழக மீனவர்கள் குறித்த உண்மைத் தகவல்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசியப் பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.25 லட்சம் உடனே வழங்கிட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய சிகிச்சையும், உயிரிழந்த மீனவ குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும். புயல் மற்றும் கடல்சீற்றம் போன்ற இயற்கை பேரிடர்களை வரும்முன்னே அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை போர்க்கால அடிப்படையில் உடனே சீர்செய்து தந்திடவேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனே செயல்படுத்த வேண்டும் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார்கள்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க