அனிதா தற்கொலை குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது! தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தகவல்

அனிதாவின் தற்கொலை குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.

                         
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

                      
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன், ‘’இன்றைய கூட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி, அரசின் நலத்திடடங்கள் வழங்குவதில் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என விவாதிக்கப்பட்டது. அனிதாவின் தற்கொலை குறித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடமிருந்து கடந்த 12-ம் தேதி அறிக்கை கிடைத்துள்ளது. அந்த அறிக்கை புகார்தாரர் கிருஷ்ணசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது பதில் அறிக்கை கிடைத்தவுடன் இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கப்பட்டு, விரைவில் விசாரணையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு ’நிமிர்ந்து நில் இந்தியா’ திட்டத்தில் தொழில் செய்ய விரும்புவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தொழில் பயிற்சி மற்றும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து இளைஞர்களுக்கு உரிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்ரா கடன் திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோருக்கு ரூ.13 கோடியே 90 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.38 கோடி மதிப்பில் 2,118 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டமும் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. எனினும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுமையாகக் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!