கழிவறை இல்லாத கட்டடங்கள் எதற்கு? - பள்ளிக்குப் பூட்டுப்போட்டு போராடிய காஞ்சிபுரம் மக்கள்!

கூடுதல் கழிவறை வேண்டியும், புதிய இடத்தில் பள்ளியைக் கட்ட வலியுறுத்தியும் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மேல் ஒத்திவாக்கம் மக்கள் பள்ளிக்குப் பூட்டுபோட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மேல்ஒத்திவாக்கம் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி உள்ளது. கடந்த இரண்டு வருடத்திற்கு முன் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினார்கள். தற்போது 170 மாணவர்கள் வரை இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள். உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய பிறகும் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவில்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் என தலா ஒரு கழிப்பறை மட்டுமே பள்ளியில் உள்ளது. ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருப்பதால், கூடுதல் கழிப்பறை வசதி செய்துகொடுக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறைக்குப் பெற்றோர்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், கூடுதல் கட்டடங்களைக் கட்ட பள்ளிக் கல்வித்துறை அனுமதியளித்தது. பள்ளி வளாகம் இடநெருக்கடியான இடத்தில் இருந்ததால், அந்த இடத்தில் கட்டடங்கள் கட்டக் கூடாது. ஊரில் பல இடங்களில் புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தை தேர்வு செய்து விளையாட்டு மைதானம், கூடுதல் கழிவறைகளுடன் பள்ளிக் கட்டடத்தை கட்ட வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்குப் பூட்டுபோட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மாற்று இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்டித்தருவதாக அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!