வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (16/12/2017)

கடைசி தொடர்பு:13:57 (04/07/2018)

ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் புதுக்கோட்டை காளைகள்..!ஜல்லிக்கட்டுக்கு முந்திக்கிட்டு தயாராகிவருகிறது புதுக்கோட்டை மாவட்டம். பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் தொடர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, கிராமங்களில் வளர்க்கப்படும் காளைகள் தயாராகிவிட்டன. ராபூசல், கவிநாடு, அன்னவாசல், கறம்பக்குடி, ஆலங்குடி-கொத்தமங்கலம், விராலிமலை, திருமயம் உள்ளிட்ட ஊர்கள் ஜல்லிக்கட்டு திருவிழாவுக்கு சிலிர்த்துக்கொண்டு தயாராகிவருகிறது.

ஜல்லிக்கட்டு திருவிழாவுக்கு மதுரை மாவட்டம் பிரபலம் என்றாலும், அதிக அளவில் நடப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில்தான். தை மாதத்தில், திரும்பிய பக்கமெல்லாம் காளைகள் சீறிக்கொண்டிருக்கும். சிறுவர்கள்கூட கன்றுக்குட்டியைக்கொண்டு மாடுபிடி பயிற்சி எடுப்பதை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம்.  

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தங்கள் காளைகளைத் தயார்படுத்தும் பணிகளில் இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். மணலை மலைபோல குவித்து, அதில் காளைகளைக் குத்தவைத்து பயிற்சி தருகிறார்கள். தினமும் இரண்டு கொம்புகளிலும் விளக்கெண்ணெய்யைத் தடவிவிட்டு, மெல்லிய கத்தியால் சீவி கூர்மைப்படுத்துகிறார்கள். காளை எப்போதும் சீற்றமும் கோபமுமாக இருப்பதற்காக அதை அடிக்கடி சீண்டிவிடுகிறார்கள்.

இப்படிச் செய்வதன்மூலம் தனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் அருகில் வந்தாலே காளைகள் சீறும். சீற்றம் வற்றாத காளைகள்தான் வாடிவாசலில் ஏவுகணை போல வரும். மாடுபிடி வீரர்களால் அப்படிப்பட்ட காளைகளைத் தொடக்கூட முடியாது" என்கின்றனர் ஜல்லிக்கட்டுக்காகவே காளைகளை வளர்ப்பவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆலங்குடி, அரிமளம் பகுதி காளைகளுக்குத் தனி மரியாதை உண்டு. அதிலும், ஆலங்குடி காளை வருகிறது என்றாலே, மாடுபிடி வீரர்கள் இரண்டு 'தப்படி' பின்வாங்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு சினந்துகொண்டும் சீறிக் கொண்டும் வரும். இங்கு, மாடு வளர்ப்போர் வீடுகளில் காணும் அதிசய  என்னவென்றால், மிரட்டும் இந்தக் காளைகளை அந்த வீட்டுச் சிறு வாண்டுகள் தொட்டு விளையாடுவதுதான்.

காளைகளும் தங்கள் சீற்றத்தைக் காட்டாமல், அந்தக் குழந்தைகளிடம் பவ்யம் காட்டும். குழந்தைகள் தங்களது மழலைக் குரலால் காளைகளை அதட்டுவார்கள். அப்போது, கழுத்தை வேகமாக ஆட்டி, மணியொலியைக் காளைகள் எழுப்பும். முன்பெல்லாம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் கட்டப்பட்டிருக்கும் கூம்புக்குழாய்களில், 'முரட்டுக்காளை' படத்தில் ரஜினி பாடும்  "பொதுவாக எம்மனசு தங்கம் 'பாட்டுதான் நாள் முழுக்க பாடிக்கொண்டே இருக்கும். இப்போது, அந்த இடத்தில் 'விருமாண்டி' படத்தில் வரும் 'கொம்புல பூவ சுத்தி...நெத்தியில பொட்டு வச்சு...கன்னிப்பொண்ணு கை வளர்த்த காளை மாடு' பாடல் பிடித்துவிட்டது.