நில அபகரிப்புப் புகார் எதிரொலி: கிரண்பேடி ஆய்வு!

கிரண்பேடி, புதுச்சேரி மாநிலத்துக்கு ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து, வார இறுதி நாள்களில் கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

அதேபோல, பொதுமக்கள் ஆளுநரிடம் அளிக்கும் புகார் மனுக்களின் அடிப்படையில் நேரில் சென்று ஆய்வுசெய்து, அது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். அதன்படி, இன்று காலை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி செந்தில் மீதான நில அபகரிப்புப் புகார்குறித்து அவர் நேரில் ஆய்வுசெய்தார்.

சென்னை பெருங்குடி, திருமலை நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவலர், ரத்தினவேல். இவருக்குச் சொந்தமான கவுண்டபாளையம் பகுதியில் உள்ள நிலத்தை ரவுடி செந்தில் மிரட்டி வாங்கி, வீட்டு மனைகளாக விற்பனைசெய்துள்ளார்  என ஆளுநர் மாளிகைக்கு புகார் சென்றது. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட அந்த இடத்துக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வுசெய்தார் கிரண்பேடி.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயிலில் இருக்கும் குற்றவாளி  செந்தில் தங்களின் இடத்தை அபகரித்து வைத்து இருப்பதாக ஆளுநர் மாளிகையில் புகார் தெரிவித்தனர். அதனால் அந்த நில அபகரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆய்வு செய்தோம். கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரின் பட்டியலைக் கேட்டிருக்கிறேன். தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள் தொடர்பான புகார்கள் வந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். துணைநிலை ஆளுநருக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நில அபகரிப்பு தொடர்பாக காவல் நிலையங்களில் புகர் அளிக்கப்பட்டால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். நில அபகரிப்பு புகார்களில் அரசியல் பிரமுகர்கள் சம்பந்தபட்டு இருந்தால் பாரபட்சமின்றி குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!