ராமேஸ்வரம் வரும் ஜனாதிபதியிடம் பிரச்னைகுறித்து மீனவர்கள் முறையிட முடிவு!

வரும் 23-ம் தேதி, ராமேஸ்வரம் வர உள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை ராமேஸ்வரம் மீனவர்கள் சந்தித்து, கடந்த 30 வருடங்களாகத் தமிழக மீனவர்கள் சந்தித்துவரும் பிரச்னைகுறித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வரும் 23-ம் தேதி, ராமேஸ்வரம் வருகிறார். ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம்செய்த  பின்னர், பேய்க்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்தைப் பார்வையிடுகிறார்.

மீன்பிடிக்க செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் படகுகள்  

கடந்த 30 வருடங்களாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துவருகின்றனர். மீனவர்கள்  எதிர்கொண்டுவரும் பிரச்னைகுறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்து, அதற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்திட ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

மேலும்,  4 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் குடியரசுத் தலைவரிடம் அளிக்க  உள்ளனர். அந்த மனுவில், இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட மீவர்களையும் படகுகளையும் விடுதலைசெய்ய நடவடிக்கை வேண்டும்; பாரம்பர்யமாக மீன்பிடித்துவரும் இடத்தில் தொடர்ந்து மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கைக் கடற்படை மீனவர்கள்மீது தினமும் தாக்குதல் நடத்தியும், படகுகளை சேதப்படுத்தியும், பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தியும்வருகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீனவர்களின் மாற்றுத் தொழிலான ஆழ்கடல்  மீன்பிடிப்பில் பயன்படுத்தப்படும் படகுகள் வாங்குவதற்கு முழுத் தொகையையும் மத்திய அரசு மானியமாக  வழங்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!