'மணல் எடுக்க மாட்டுவண்டிகளை அனுமதியுங்கள்'- கட்டுமானப் பொறியாளர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றுமணல் முழுமையாகக் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கவும், வீடுகள் கட்டும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மாட்டுவண்டிகளில் மட்டும் மணல் அள்ளி எடுத்துச்செல்ல புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என கட்டுமானப் பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சையைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர்கள், ‘மணல் தட்டுப்பாட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கட்டுமான வீடுகள் தடைப்பட்டுக் கிடக்கின்றன. புதிதாகக் கட்டிக்கொண்டிருந்த ஏராளமான வீடுகள் முழுமை பெறாமல் தடைப்பட்டுள்ளன. செயற்கை மணல் பயன்படுத்தினால்தான் தரமிருக்காது என்ற கருத்து மக்களிடம் பரவலாக இருக்கிறது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதன் தரம் குறித்த உண்மை நிலை உறுதிப்படுத்தப்படும். எனவே, கட்டுமானப் பணிகளுக்கு ஆற்றுமணலின் தேவை தவிர்க்க முடியாதது. ஆறுகளின் இயல்பு நிலை பாதிக்கப்படாமல் மணல் எடுக்க, மாட்டு வண்டிகளை அனுமதிக்க வேண்டும். லாரி, ஜே.சி.பி போன்ற இயந்திரங்கள்கொண்டு மணல் எடுப்பவர்கள்தான் அதிகமான ஆழத்தில் தோண்டி, அதிக அளவில் மணலைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். மாட்டுவண்டிகளில் மட்டும் மணல் எடுக்க அனுமதித்து, அது கட்டுமானப் பணிகளுக்குதான் எடுத்து செல்லப்படுகிறதா என்பதை சமூகநல ஆர்வலர்கள், காவல்துறை அதிகாரிகள், விவசாயிகள்கொண்ட குழுவின்மூலம் கண்காணிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!