வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (16/12/2017)

கடைசி தொடர்பு:14:40 (16/12/2017)

'வடமாநில கொள்ளையர்களைக் கண்காணியுங்கள்'- போலீஸுக்கு ஜி.கே.வாசன் யோசனை

சமீப காலமாக, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிலை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் யோசனை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில், கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோயில்களில், கடந்த சில ஆண்டுகளாக சிலை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பட்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயிலில் பாதுகாக்கப்பட்டுவந்த சுற்றுவட்டாரக் கோயில்களின் ஐம்பொன் சிலைகளில், 10 சிலைகள் காணாமல்போனது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். மேலும், சிலை கடத்தல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும். இதன் முதல்கட்டமாக , தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அமைந்துள்ள கோயில்களின் சிலைகளைப் பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும். இனியும் இதில் காலதாமதம் செய்யக்கூடாது. வடமாநில கொள்ளையர்களை தமிழ்நாடு காவல்துறை தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என யோசனை தெரிவிக்கிறார்.