வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (16/12/2017)

கடைசி தொடர்பு:15:29 (16/12/2017)

9 எம்.எம் குண்டு; பிரேதப் பரிசோதனை; 5 மணிநேர விசாரணை! - தமிழக போலீஸாரை கேள்விகளால் துளைத்த ராஜஸ்தான் 

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மரணம் தொடர்பாக, ஆய்வாளர் முனிசேகர் மற்றும் தனிப்படை போலீஸாரிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக ராஜஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், தமிழக போலீஸாரைச் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று, நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்துள்ளனர். 

சென்னை, கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக, ஆறு தனிப்படைகளை அமைத்தது காவல்துறை. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு வடமாநில கொள்ளையர்களைத் தனிப்படை கைதுசெய்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சௌத்ரி ஆகியோரைப் பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்றனர்.

அங்கு, பதுங்கியிருந்த நாதுராமைப் பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில், பெரியபாண்டியன் உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் மூன்று போலீஸார் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் சந்தோஷ்குமார், ராஜஸ்தான் போலீஸாருடன் ஆலோசனை நடத்தினர். பிறகு, காயமடைந்த இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸாருக்கு ஆறுதல் கூறியதோடு நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்தார். பெரியபாண்டியன் எப்படி சுடப்பட்டார் எனக் கேட்டபோது, கொள்ளையர்களிடம் அவர் சிக்கிக்கொண்டதாகவும், அவரைக் காப்பாற்றப் போராடியபோது அவரைக் கொள்ளையர்கள் சுட்டுவிட்டதாகவும் கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளனர்.

பெரியபாண்டியன் கொலைச் சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்த ராஜஸ்தான் போலீஸார், தலைமறைவாக இருக்கும் கொள்ளையன் நாதுராமைத் தேடிவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், பெரியபாண்டியனின் உடலில் துளைத்த துப்பாக்கிக் குண்டுகள் குறித்து தமிழக, ராஜஸ்தான் போலீஸார் கூறும் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன. இது, அவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘பெரியபாண்டியனின் உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் இருக்கும்' என்று எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் பிரேதப் பரிசோதனையில், மார்புப் பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்தக் குண்டு அவரது உடலை துளைத்துவிட்டு வெளியில் சென்றிருக்கிறது. இதற்கிடையில், ராஜஸ்தானில் சிகிச்சைபெற்றுவந்த இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார் இன்பரோஸ், குருமூர்த்தி, சுதர்சன் ஆகியோர் இன்று தமிழகம் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு, பெரியபாண்டியன் மரணம்குறித்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், “பெரியபாண்டியன் மரணத்தில் ஆரம்பத்திலிருந்தே சில சந்தேகக் கேள்விகள் எழுந்தன. ஏனெனில், அவரது உடலைத் துளைத்த துப்பாக்கிக் குண்டு, இன்ஸ்பெக்டர் முனிசேகருடையது என்கின்றனர். இதைக் கண்டறிவதற்காக பெரியபாண்டியன், முனிசேகர் ஆகியோரின் துப்பாக்கிகளை ராஜஸ்தான் மாநில தடய அறிவியல் நிபுணர்களிடம் ஒப்படைத்துள்ளோம். அடுத்து, பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்து வெளியேறிய துப்பாக்கிக் குண்டை கடந்த இரண்டு நாள்களாக ராஜஸ்தான் போலீஸார் தேடியுள்ளனர். சம்பவ இடத்தில் உள்ள மணலில் துப்பாக்கிக் குண்டு புதைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதையும் ஆய்வுக்காக தடய அறிவியல் நிபுணர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்

பெரிய பாண்டியன் எவ்வளவு தூரத்திலிருந்து சுடப்பட்டார்... எந்தத் திசையிலிருந்து அந்தக் குண்டு வந்தது... யாருடைய துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறியது போன்ற தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ராஜஸ்தான் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், காயமடைந்த இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் சம்பவ இடத்திலிருந்த தனிப்படை போலீஸாரிடமும் ராஜஸ்தான் போலீஸார் 5 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி, அவர்கள் கொடுத்த தகவல்களை வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் முனிசேகரிடம் மட்டும் நீண்ட நேரம் விசாரித்த ராஜஸ்தான் போலீஸார், ' பெரியபாண்டியனைச் சுடும்போது நீங்கள் பார்த்தீர்களா?' என்ற கேள்வியைக் கேட்டுள்ளனர். அதற்கு முனிசேகர், ' இருட்டாக இருந்ததால் துப்பாக்கி சுடும் சத்தம் மட்டுமே கேட்டது. எதையும் பார்க்கவில்லை' என்று பதிலளித்துள்ளார். மேலும், ‘உங்கள் துப்பாக்கி எப்படித் தவறி விழுந்தது?' என்று கேட்டதற்கு, 'கொள்ளையர்களுடன் நடந்த மோதலின்போது விழுந்திருக்கலாம்' என்று பதிலளித்துள்ளார். அதன்பிறகே, தமிழக போலீஸாரை சென்னைக்குச் செல்ல அனுமதியளித்துள்ளனர் ராஜஸ்தான் போலீஸார். மேலும், 'தேவைப்படும்போது விசாரணைக்கு வரவேண்டும்' எனவும் கூறியுள்ளனர்" என்றார் விரிவாக.

பெரியபாண்டியனின் பிரேதப் பரிசோதனையிலிருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது, அவரது உடலைத் துளைத்த துப்பாக்கிக் குண்டு, நுரையீரலைப் பாதித்துள்ளது. இதனால், பெரியபாண்டியன் உடனடியாக இறந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து தடயங்களைச் சேகரித்துள்ள ராஜஸ்தான் போலீஸார், பெரியபாண்டியன் மரணத்தில் இன்னும் சில சந்தேகங்கள்  இருப்பதாக தமிழக போலீஸ் உயரதிகாரிகளிடம் கூறியுள்ளனர். ‘துப்பாக்கியில் உள்ள கைரேகை, சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 9 எம்.எம் துப்பாக்கிக் குண்டு, பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும்’ என்று ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையன் நாதுராமைப் பொறுத்தவரை, ஜெய்த்ரன் போலீஸ் நிலையத்தில் நான்கு வழக்குகளும், பிலாவாடா போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் இருப்பதாக ராஜஸ்தான் போலீஸார் தெரிவிக்கின்றனர். இதில், கொலை வழக்கு எதுவுமில்லை. கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சென்னையில் இரண்டு கொள்ளை வழக்குகள் நாதுராம் மீது உள்ளன. 'நாதுராம் பிடிபட்டால் மட்டுமே பெரியபாண்டியன் மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு முழுமையாக விடை கிடைக்கும்' என்கின்றனர் போலீஸார்.


டிரெண்டிங் @ விகடன்