வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (16/12/2017)

கடைசி தொடர்பு:17:20 (16/12/2017)

`மத்தவங்க பேச்சைக்கேட்டு என் மனைவியைக் கொண்ணுட்டேன்' - கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்

குடி குடியைக் கெடுக்கும் என்பதை வார்த்தைகளாகக் கேட்டிருப்போம் அல்லது படித்திருப்போம். ஆனால், குடியால் ஒரு குடும்பமே நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவன் காவல்துறையிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் அனைவரையும் அதிர்சியில் உறைய வைத்திருக்கிறது.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள நடுவலூர் சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் மகாராஜன். இவர் மனைவி செல்வி. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள். 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். மகாராஜன் தினமும் குடித்துவிட்டு வந்து செல்வியை அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர்களின் பெண்கள் 3 பேருக்கும் திருமணம் முடிந்து அவர்கள் வெளியூரில் இருக்கின்றனர். மகன்கள் இருவரும் தந்தையின் குடிப் பழக்கத்தால் வெளியூருக்குச் சென்று தனியே வாழ்ந்து வருகின்றனர். நேற்று இரவு செல்வி தனது வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது மகாராஜன் வழக்கும்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.          

தன் மனைவி இன்னொருவருடன் பேசிக்கொண்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாததால் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் செல்வி கோபித்துக்கொண்டு அருகில் உள்ள ஒருவர் வீட்டுக்குச் சென்று படுத்துத் தூங்கிவிட்டு காலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மகாராஜன் வீட்டில் இருந்த விஷமருத்தை வலுக்கட்டாயமாகச் செல்வியின் வாயில் ஊற்றி குடிக்கச் செய்துள்ளார். விஷத்தை அருந்திய செல்வி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து வீட்டிலேயே இறந்துள்ளார். பின்னர், வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தைத் தீவைத்துக் கொளுத்திவிட்டு இறந்துபோன மனைவியின் அருகிலேயே உட்கார்ந்திருந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த உடையார்பாளையம் போலீஸார் சம்பவ இடம் சென்று செல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பின்னர், மகாராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். "மகாராஜன் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் பிரச்னை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் அவர்கள் பிள்ளைகளும் இவர்கூட இருக்கமுடியாமல் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். செல்வி குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காகவே 100 நாள் வேலைக்குச் செல்வதும். அந்த வேலை இல்லாத நாள்களில் வயல்வேலைக்குச் செல்வதுமாக இருந்து குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். அவ்வப்போது மகாராஜனுக்கு குடிக்க பணம் கொடுத்திருக்கிறார். இவள் குடிகார புருஷனை வைச்சிக்கிட்டு எப்படி குடும்பத்தை நடத்துகிறார் என்று பொம்பளைங்களுக்குள்ள ஈகோ பிரச்னை ஏற்பட்டு, மகாராஜன் குடித்துவிட்டு வரும்போது மனைவி பற்றி தவறான தகவலைச் சொல்லி அவர் மைண்ட்ல ஏத்திவிட்டுருக்காங்க.

அதை மனதில் வச்சிக்கிட்டு வயலுக்கு அடிக்க வைத்திருந்த மருந்தை மனைவி வாயில் ஊற்றிக்கொன்றிருக்கிறார். தினமும் குடிச்சிட்டு வந்ததால் அவர் யோசிக்கும் தன்மையை இழந்துவிட்டார். இப்போது நாங்கள் விசாரிக்கும்போது, நான் குடியால் மத்தவுங்க பேச்சைக்கேட்டு என்ன செய்வது தெரியாமல் என் மனைவியை கொன்றுவிட்டேன். என் குடியால் என் மகன், மகள்களிடம் நல்ல பேர் இல்லை. இந்தச் சமுதாயத்திலும் நான் கொலை காரணாக மாறிவிட்டேன். இனிமேல் நான் குடிக்க மாட்டேன். என்னை தயவு செய்து வெளியில் விடாதீர்கள்' என்று கெஞ்சுகிறார் என்கிறார்கள் அதிகாரிகள்.