வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (16/12/2017)

கடைசி தொடர்பு:18:20 (16/12/2017)

வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவகங்கைத் தெப்பக்குளம் சீரமைக்கப்படுகிறது!

சிவகங்கை நகரிலுள்ள தெப்பக் குளத்துக்கென்று தனி வரலாறு உண்டு. அந்தக் காலத்தில் சிவகங்கை மக்கள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது சிவபெருமானை வேண்டி யாகங்களும் பூஜைகளும் பக்தர்கள் செய்தார்களாம். அப்போது சிவனின் தலையில் இருக்கும் கங்கை நதியை இந்தக் குளத்துக்குத் திருப்பிவிட்டதால் குளத்தின் ஒரு மூலையில் ஊற்று பெருக்கெடுத்து  தண்ணீர் கட்டுக்கடங்காமல் குளம் முழுவதும் நீர் நிரம்பியதாக வரலாறு சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் கிடந்தது. வரத்துக்கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் வராமல் பல ஆண்டுக்காலம் சிறுநீர் மலம் கழிக்கவும் மது பிரியர்களின் பாராகவும் இருக்கிறது.

 

கண்ணப்பன், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பெரியார் கால்வாயிலிருந்து இந்தத் தெப்பக்குளத்துக்குத் தண்ணீர் கொண்டுவந்தார். அப்போதைய மாவட்ட ஆட்சியர் சண்முகம் இதற்காகப் பெரும் முயற்சி எடுத்தார். அதன் பிறகு, சிதைந்துக் கிடந்த தெப்பக்குளத்தை மராமத்து செய்யும் பணியைச் சிவகங்கை நகராட்சி பல லட்சம் ரூபாய் செலவில் அரைகுறையாகச் செய்து பெரும் பகுதி பணம் மோசடி செய்யப்பட்டதாக மற்ற அரசியல் கட்சிகளிடையே புகைச்சலை ஏற்படுத்தியது. மேலும், மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி கிழக்கு இந்திய கம்பெனியான முருகப்பா கம்பெனியான பீர் தயாரிக்கும் கம்பெனியும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டு தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியைத் தொடர்ந்த அவர்களும் பாதியிலேயே சீரமைக்கும் பணியை விட்டுவிட்டு கிளம்பிவிட்டார்கள் . அதில் முறைகேடுகளைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் புகார் வாசித்துவருகிறார்கள். ஆக தெப்பக்குளம் பல வருடமாகக் கேட்பாரற்றுக் கிடந்தது. தற்போது நடந்து முடிந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை தெப்பக்குளம் சீரமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி தெப்பக்குளம் சீரமைக்கும் வேலை தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க