`பயத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!' - விளாசும் சி.பி.எம் ஜி.ராமகிருஷ்ணன்

கோவை, நெல்லை, கடலூர் எனத் தன் ஆய்வுப் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். முதலில் கோவை மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாகச் சென்ற ஆளுநர், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வுசெய்தார். ஆளுநரின் ஆய்வால் தமிழகத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. ``ஆளுநரின் செயல்பாடு மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது” என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன. 

ராமகிருஷ்ணன்எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாத ஆளுநர் நெல்லையில் மத்திய அரசின் பணிகளைப் பார்வையிடுவதாகக் கூறி ஆய்வு நடத்தினார். ஆளுநரின் நடவடிக்கைகளுக்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் சாசன சட்டப்பிரிவுகளில் இல்லாதது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எதிர்ப்புகளுக்கு இடையே கடலூரில் தூய்மைப் பணிகள் குறித்து ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடியுடன் பேரணி நடத்தியதால் ஆளுநரின் ஆய்வில் தொய்வு ஏற்பட்டது.

`ஆளுநரின் ஆய்வுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு' எனும் கேள்வியை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் முன்வைத்தோம். அவர் கூறிய பதில் பின்வருமாறு...

“ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவரின் வரம்பை மீறி செயல்படுகிறார். இதுபோன்று நடப்பது புதிதல்ல. இன்றைய துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னைத் தலைமைச் செயலகத்திலேயே மாநில அமைச்சரின் முன்னிலையில் மத்திய அரசின் திட்டம் ஒன்று குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அந்தச் சமயத்தில் பெரும் விவாதங்கள் எழுந்தன. அது தவறு என்று விமர்சனங்களும் எழுந்தன. இதற்கு முன்னர் தற்காலிக ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் சட்டமன்றத்தைக் கூட்டுவது என ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அவரின் செயல்பாடுகள் இருந்ததாக அவர்மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அப்போது நிரந்தர முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர்.

“நிரந்தர ஆளுநரோ தற்காலிக ஆளுநரோ அவரின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது என்பதுதான் முக்கியம் என்று அந்தச் சமயத்தில் நான் கூறியிருந்தேன். அப்படித்தான் தற்போது பிரச்னை வெடித்துள்ளது. நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரின் செயல்பாடுகள் முன்னர் இருந்தவரைப்போல்தான் உள்ளது. கோவை சென்று ஆய்வு நடத்தினார். எதிர்ப்புகள் எழுந்தன. நெல்லை, குமரிக்குச் சென்றார்; கண்டித்தார்கள். எதிர்ப்புகள் எழுந்தன. அவர் பட்டமளிப்பு விழாக்களில் பங்குபெறுவது பிரச்னை இல்லை. ஆனால், அதிகாரபூர்வமாக ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆய்வு மேற்கொள்கிறார். இது வரம்பை மீறும் செயல்.

மாநில அரசு நம் தயவில்தான் ஆட்சி நடத்துகிறார்கள் என்று அவருக்கு எண்ணம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாநில அரசும் பா.ஜ.க-வை எதிர்க்கப் பயப்படுகிறது. மாநில அமைச்சர்கள் இன்றுவரை ஆளுநரின் ஆய்வு குறித்து வாய் திறக்கவில்லை. தற்போதைய அரசு பினாமி ஆட்சி என்பதை நிரூபித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டால் அதுகுறித்த தகவலைக் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பலாம். ஆனால், ஒன்றுமே நடக்காத சாதாரண சூழலில் மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாட்டில் தலையிட வேண்டிய அவசியமேயில்லை. ஒகி புயலின்போது பேரிடராக அறிவிக்க வேண்டும் என உடனடியாகக் கேரள முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒரு வாரம் கழித்துதான் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். தாமதத்துக்கு காரணம் பயம்தான். இது ஒரு மோசமான சூழல்” என்று முடித்தார் ஆவேசமாக. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!