வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (16/12/2017)

கடைசி தொடர்பு:22:30 (16/12/2017)

அரசுப் பள்ளியில் பாம்புகள் பற்றிய விழிப்பு உணர்வு முகாம்!

 

othakadai

தமிழ்நாடு வனத்துறை மதுரை வனக்கோட்டம் மற்றும் ஊர்வனம் அமைப்பு சார்பாகப் பாம்புகள் பாதுகாப்பு மீட்பு மற்றும் பாம்புகடி சிகிச்சை விழிப்பு உணர்வு முகாம் ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை வனச்சரகர் ஆறுமுகம் அவர்கள் இதற்கு முன்னிலை வகித்தார். ஊர்வனம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் விஷ்வா, சகா ஆகியோர் பாம்புகளின் வகைகள், உணவுச் சங்கிலியில் பாம்புகளின் முக்கியத்துவம், நஞ்சுள்ள பாம்புகள், நஞ்சற்ற பாம்புகள், பாம்பு கடித்தால் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவிகள், பாம்புகடியிலிருந்து மீட்பு நடவடிக்கைகள், பாம்புகள் பற்றிய மூடநம்பிக்கைகள் ஆகியன பற்றி உரையாடல் மற்றும் குறும்படம் மூலமாகப் புரியும்படி விளக்கினர். அதைத் தொடர்ந்து பாம்புகள் பற்றிய பலவிதமான சந்தேகங்களுக்கு ரேஞ்சர் ஆறுமுகம் உதவி சரகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். 

 

மாணவி கவிபாரதி இது பற்றி கூறுகையில், ``பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்த உரையாடலுக்குப் பிறகு எங்களுக்கு பாம்புகளின் மீதான பயம் குறைந்துபோயிற்று. மேலும் பாம்பு கடித்தால் உடனடியாகச் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை பற்றி அறிந்துகொண்டோம்'' என்றார். 

மாணவர் ஜோதிஷ் வர்மா பாம்பு பற்றிய சிறப்பு பாடல் ஒன்றைப் பாடி அசத்தினார். இந்தப் பாம்பு விழிப்பு உணர்வு எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பாம்புகளைப் பற்றிய புரிதல் எங்களுக்கு அதிக அளவு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.