வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (16/12/2017)

கடைசி தொடர்பு:22:01 (16/12/2017)

குடியரசுத் தலைவர் வருகைக்காகச் சீரமைக்கப்படும் பாம்பன் பாலம்... பாதிக்கப்படும் சிறு வியாபாரிகள்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராமேஸ்வரம் வருவதைத் தொடர்ந்து பாம்பன் அன்னை இந்திராகாந்தி பாலத்தில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாம்பன் தொடங்கி ராமேஸ்வரம் வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

குடியரசுத் தலைவரின் ராமேஸ்வரும் வருகைக்காக சீரமைக்கப்படும் பாம்பன் பாலம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இம்மாதம் 23-ம் தேதி ராமேஸ்வரம் வர உள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாமுக்கு வருகிறார். பின்னர், அங்கிருந்து கார் மூலமாக ராமேஸ்வரம் வரும் குடியரசுத் தலைவர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் நினைவிடத்தைப் பார்வையிடுகிறார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து ஏற்கெனவே பாம்பன் பாலத்தில் ஆங்காங்கு அகற்றப்படாமல் இருந்த ரப்பர் சாலைகள் இன்று அகற்றப்பட்டு புதிதாகத் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதே போன்று குடியரசுத் தலைவர் கார் மூலம் பயணிக்க உள்ள மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்குதளம் முதல் ராமேஸ்வரம் கோயில் வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றத்தினால் ராமேஸ்வரம் நகராட்சியில் முறையாகப் பணம் செலுத்தி ராமேஸ்வரம் பேருந்து நிலையப் பகுதியில் ஐயப்ப சீஸன் கடை அமைத்துள்ள சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.