தரைதட்டிய தக்காளி, முறுக்கேறிய முருங்கை... இது ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நிலவரம்! | Vegetable price rate at Oddanchatram market

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (17/12/2017)

கடைசி தொடர்பு:13:36 (17/12/2017)

தரைதட்டிய தக்காளி, முறுக்கேறிய முருங்கை... இது ஒட்டன்சத்திரம் மார்க்கெட் நிலவரம்!

மிழகத்தின் காய்கறி விலையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட். ஆசியாவின் பெரிய சந்தைகளில் ஒன்றான இங்கிருந்து, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. நாளொன்றுக்கு சுமார் 20 கோடி ரூபாய் வரை இங்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒட்டன்சத்திரம் சந்தையில் தற்போதைய பரபரப்பு செய்தியாக இருப்பவை தக்காளி மற்றும் முருங்கை. தக்காளி விலை தரைதட்டி நிற்கிறது. முருங்கை விலை அதிகரித்திருக்கிறது என்பதுதான்.

ஒட்டன்சத்திரம் சந்தை 

விலையேற்றம் மற்றும் விலை இறக்கத்துக்குக் காரணம் என்ன? சந்தையில் ஒரு வியாபாரியிடம் பேசினோம். “தக்காளி விலை வரத்தைப் பொறுத்துதான் இருக்கும். கொஞ்ச நாளைக்கு முன்ன கிலோ 60 ரூபாய் வரைக்கும் தக்காளி வித்துச்சு. அப்போ வரத்து குறைச்சல். போன வாரம் கிலோ பதினாலு ரூபாய்க்கு வித்துச்சு. ஆனா, இப்ப கிலோ ஆறு ரூபாய் ஐம்பது காசுக்குப் போகுது. இது இன்னிக்கு விலை; இது இன்னமும் குறைய வாய்ப்பிருக்கு. ஆந்திராவுல விளைச்சல் அதிகமாகிப்போச்சு. அதனால விலை ரொம்ப கம்மியானதால வியாபாரிங்க ஆந்திரா பக்கம் போறாங்க. அந்த வியாபாரிகளை தக்கவெச்சுக்கிறதுக்காக நாங்களும் விலையைக் குறைச்சிருக்கோம். இப்ப, இங்கயும் வரத்து அதிகமாகியிருக்கு. அதனாலதான் இந்த விலையிறக்கம்.

முருங்கையைப் பொறுத்தவரைக்கும் விளைச்சல் இல்லை. சமீபத்துல பெஞ்ச மழையில பூக்கள் கொட்டிப்போச்சு. அதையும் மீறி மழைக்குத் தாக்குப்பிடிச்சு வளர்ந்த காயும் கலர் இல்லை. முருங்கையைப் பொறுத்தவரைக்கும் காய் பச்சையா இருந்தாத்தான் விலை போகும். ஆனா, இப்ப தமிழ்நாட்டுல வர்ற முருங்கை பெரும்பாலும் கரும்பச்சை நிறத்துல இருக்கு. இதை வியாபாரிங்க ஒதுக்கிடுறாங்க. அதனால, இங்க வழக்கமா வர்ற வியாபாரிகளுக்காக குஜராத் மாநிலத்துல இருந்து முருங்கையை இறக்குமதி பண்ணி விற்பனை செய்றோம். குஜராத் மாநிலத்துல இப்ப முருங்கை விளைச்சல் அதிகம். அதனால அங்கிருந்து பன்னிரண்டு டன் முருங்கையை இங்க கொண்டு வந்திருக்கோம். குஜராத் முருங்கை நல்ல நிறத்துல தடிமனா இருக்குறதால வியாபாரிங்க அதை விரும்பி வாங்குறாங்க. வெளிமாநிலத்துல இருந்துகொண்டு வந்து விக்கிறதால முருங்கை விலை கூடிப்போச்சு. இப்பவும் தமிழ்நாட்டுல நல்ல நிறமா இருக்க காய்களுக்கு நல்ல விலைகிடைக்குது’’ என்றார்.

முருங்கை

ஒட்டன்சத்திரம் சந்தையில் கரும்பு முருங்கை கிலோ 110 ரூபாய், செடி முருங்கை கிலோ 85 ரூபாய், மரமுருங்கை கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. ஒட்டன்சத்திரம் சந்தையைப் பொறுத்தவரை காய்கறி விலை தினசரி நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் சந்தையில் அதிகளவில் கொள்முதல் செய்வது கேரள வியாபாரிகள்தான். தற்போது ஐயப்பன் சீசன் தொடங்கியுள்ளது. எனவே கேரள வியாபாரிகள் விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிச் செல்கிறார்கள். 

விலை உயர்ந்த வெண்டை!

பழநி பகுதியில் வெண்டைக்காய் சாகுபடி அதிகம் நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் மழை, பனி காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட தற்போது பாதி அளவில்தான் மகசூல் கிடைக்கிறது. இதனால் வெண்டைக்காயின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ஆறு ரூபாய்க்கு விற்பனையான வெண்டைக்காய் தற்போது, கிலோ இருபது ரூபாய் வரை விற்பனையாகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்