வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (18/12/2017)

கடைசி தொடர்பு:10:46 (18/12/2017)

“முதியோர் இல்லத்துல தஞ்சமடைஞ்சுருக்கேன்... ப்ளீஸ் ஏத்துக்கோங்கப்பா!" பார்வையற்ற 'அருவி'யின் பரிதாபக் குரல்

பிறவியிலேயே பார்வை இல்லாதவ நான். நமக்குப் பார்வை இல்லையேன்னு ஒருமுறைகூட நான் வருத்தப்பட்டது கிடையாது. என்னோட குறிக்கோள் கல்வி ஒண்ணுதான். இந்தச் சமூகத்துல நலிவடைஞ்சு போயிருக்குற என்னோட சனங்களை எப்படியாவது மேல கொண்டு வரணும்னா அதுக்குக் கல்வி முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டேன். எனக்குப் பார்வை இல்லைன்னாலும் நாம எந்த மாதிரியான சூழல்ல வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்ங்கிறதை சின்ன வயசுலயே உணர முடிஞ்சது. அப்பவே என்னோட கல்விக்கான தேடுதல் பயணத்தை நான் தொடங்கிட்டேன்” தன்னம்பிக்கை வார்த்தைகளை வைரமாக உதிர்க்கிறார் அய்யம்மாள். 

பார்வையற்ற மாணவி அய்யம்மாள்

பார்வைத்திறன் இல்லாத இவர் சென்னை தண்டையார்பேட்டையிலுள்ள அரசு கலைக் கல்லூரியின் பி.ஏ மாணவி. ஆண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்பும் இருளர் இனத்தைச் சேர்ந்த இந்த அய்யம்மாள், பெண் என்ற போர்வையைத் தகர்த்து கல்விக்காகத் தாண்டி வந்திருக்கும் தடைகள் ஏராளம். 

“என் சொந்த ஊரு செஞ்சி பக்கத்துல ஒரு கிராமம். வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. ரெண்டு அண்ணனும் 1 தம்பியும் இருக்காங்க. அண்ணன் ரெண்டு பேருமே என்ன மாதிரி பார்வை இல்லாதவங்கதான். பிள்ளைங்க மூணும் இப்படி பிறந்துடுச்சுங்களேன்னு சொல்லி என் அப்பா அம்மா மேல கோபப்பட்டு வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அப்போ எனக்கு ரெண்டு வயசு இருக்கும். அம்மாதான் கஷ்டப்பட்டு வேலபார்த்து எங்களை வளர்த்தாங்க. வீட்டுல இருக்குற நாலு பிள்ளைங்களும் பள்ளிக்கூடத்துக்குப் போயிடுச்சுன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சு ரெண்டு பேர மட்டும் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ரெண்டு பேர சின்ன வயசுலயே வேலைக்கு அனுப்பிட்டாங்க. என் அண்ணன் வேலைக்குப் போனா தினமும் அம்பது நூறு கைக்குக் கிடைக்கும். அத வெச்சித்தான் சாப்பாடு ஆக்கிப்போடுவாங்க. ஆனா, பாருங்க ஏற்கெனவே அப்பா இருந்தும் இல்லாம வாழ்ந்துக்கிட்டு இருந்த நாங்க அடுத்ததா அம்மாவ முழுசா இழக்க வேண்டியதாகிடுச்சு. என்னோட ஏழு வயசுல அம்மா இறந்துபோனதும் அப்பாவோட வீட்டுக் கதவத்தான் தட்டினோம். 

அப்பாவோட வீட்டுல எங்களுக்குப் புதுசா நாலு தம்பிங்க கிடைச்சாங்க. அவங்களைப் பாத்துக்குறது, குளிப்பாட்டி விடுறது, ஸ்கூலுக்குக் கூட்டிட்டு போறதுன்னு அந்த வீட்டுல இருந்த எல்லா வேலைகளையும் நாங்கதான் செய்யணும். கண்ணு தெரியாத பசங்கன்னு எங்க மேல யாருக்குமே இரக்கம் வராது. எல்லா வேலைகளையும் எங்ககிட்டதான் கொடுப்பாங்க. அதுதான் என்னைப் பள்ளிக்கூடம் பக்கம் துரத்துச்சு. வீட்டுல சித்திக்கிட்ட கெடந்து மல்லுக்கட்டுறதுக்கு பதிலா ஸ்கூலுக்குப் போலாம்னு ஓடினேன். கண்ணுத் தெரியாதவங்கிறதுனால ஸ்பெஷல் ஸ்கூலெல்லாம் போகல. ஆனா, எனக்கு பிரெய்லி முறையில படிக்குறதுக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. அது ரொம்ப யூஸ் ஃபுல்லா இருந்துச்சு. பிளஸ் டூ வரை நல்லபடியா படிச்சாலும் காலேஜ் சேரும்போது கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட் இல்லாததுனால எங்கேயும் என்னை சேர்த்துக்கலை” என்கிறார் வேதனையோடு. 

படிப்பு ஒன்றே தன்னை இந்தச் சமூகத்தில் தலை நிமிர்த்தும் என்ற நினைப்பில் பார்வை இல்லாததையும் பொருட்படுத்தாமல் கல்லூரிக் கதவைத் தட்டியவருக்குச் சாதிச்சான்றிதழ் பூட்டாகியிருக்கிறது. தன் அப்பா வேறொரு திருமணம் செய்துகொண்டதைவிட, அம்மாவின் இறப்பைவிட சாதிச்சான்றிதழ் பெறுவதுதான் அய்யம்மாவுக்கு மிகப்பெரிய மனப் போராட்டத்தைக் கொடுத்திருக்கிறது. 

“அம்மா இறந்தப்போக்கூட நான் இவ்வளவு கஷ்டப்பட்டுருக்க மாட்டேன். ஆனா, கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட் வாங்குறதுக்குள்ள ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். எங்க ஊர்ல உள்ள கன்னியப்பன் அண்ணாதான் எனக்கு அந்த நேரத்துல உதவி பண்ணுனாரு. அங்க இங்கன்னு அலைஞ்சு திரிஞ்சு ஒரு வழியா காலேஜூம் சேர்ந்தேன். என்னோட காலேஜ்லயே நான் மட்டும்தான் பார்வை இல்லாத பொண்ணு. ஆரம்பத்துல தனிமையும், குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சிருக்குற வேதனையும் சேர்ந்து ரொம்ப வலிச்சுது. ஆனா, என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். இப்போ மூணாவது வருசத்துல இருக்கேன். க்ளாஸ் ரூம்ல நடக்குறதை ரெக்கார்டு போட்டு படிச்சிக்கிட்டு இருக்குறேன். இப்போதான் ஒருவழியா என்னோட பெரிய அண்ணா லைஃப்ல செட்டில் ஆகியிருக்கான். நான் மட்டும் படிச்சிக்கிட்டு இருக்குறேன். எப்பவாச்சும் சொந்தங்களைத் தேடி செஞ்சி போய்ட்டு வருவேன். ஆனா ஒரு நாளைக்கு மேல இருக்க மாட்டேன். 

ஒரு பருவ வயசுல இருக்கற எனக்கு, அம்மாவோட அரவணைப்பு இல்ல. அப்பாவோட உறுதுணையும் இல்ல. என் அப்பாவுக்குக் கல்வி அறிவு இருந்திருந்தா எங்களைத் தவிக்க விட்டுருக்க மாட்டாருல்ல. அதான் அவரோட கண்ணுக்கு முன்னாடி நான் கெத்தா படிச்சு சாதிச்சுக் காட்டணும்னு நினைக்குறேன்” வைராக்கியத்தோடு பேசும் அய்யம்மாள் தன் அப்பாவுக்கு ஒரேயொரு கோரிக்கையை மட்டும் வைக்கிறார்.

“ப்ளீஸ் அப்பா, உங்க பொண்ணப் பத்தி இப்போவாவது நீங்க கவலைப்படுங்க. நான் இங்க ஒரு முதியோர் இல்லத்துல அனாதை மாதிரி தஞ்சம் புகுந்துருக்கேன். இன்னும் சில மாதங்கள்ல என் கல்லூரி படிப்பு முடிஞ்சிடும். அதுக்கு அப்பறம் நான் எங்க போகுறதுன்னு தெரியல. அதுக்குள்ளயாவது நீங்க மனசு மாறி உங்க பொண்ணை ஏத்துக்கோங்கப்பா. நான் வேல பாத்து உங்களையும் உங்க குடும்பத்தையும் காப்பாத்துறேன்” கண்ணீரோடு கலங்கி நிற்கிறார். அய்யம்மாவின் குரல் இனியாவது அந்தத் தகப்பனின் கல் நெஞ்சத்தை கரைக்குமா? 


டிரெண்டிங் @ விகடன்