வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (18/12/2017)

கடைசி தொடர்பு:10:00 (18/12/2017)

'கொசு, பன்னி, ஈ கூடதான் எங்க வாழ்க்கை!' - கனக்கச் செய்யும் கோயம்பேடு கதைகள்! #VikatanExclusive

ள்ளிரவு 12 மணி... பரபரப்பு ஓய்ந்து, அமைதியில் உறைந்திருக்கிறது கோயம்பேடு மார்க்கெட். பளிச்சென ஒளிரும் மெர்க்குரி விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. மிதமான சோடியம் விளக்குகள் இருட்டோடு மல்லுக்கட்ட, குவிந்து கிடக்கும் குப்பைகளில் மாடுகளும், பன்றிகளும் தங்களுக்கான இரையைத் தேடியலைகின்றன. பூ மார்க்கெட் முகப்பில், வரிசையாக ஆண்களும், பெண்களுமாகப் படுத்து இளைப்பாறுகிறார்கள். எல்லோரும் தொலைதூரத்திலிருந்து பூ, பழம் வாங்க வந்தவர்கள். இரவே வந்து தங்கி, விடியலுக்காகக் காத்திருக்கிறார்கள்.  

கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட், முதலாளிகளின் கைகளிலிருந்து தொழிலாளர்களின் கைகளுக்கு மாறும் நேரம். ஒன்றிரண்டாக வாகனங்கள் மார்கெட்டின் உள்ளே வரத் தொடங்குகின்றன. அதுவரை கிடைத்த இடங்களில் படுத்து உறங்கிய தொழிலாளர்களை கணக்குப் பிள்ளைகளின் குரல்கள் எழுப்பித் துரத்துகின்றன. 

கோயம்பேடு மார்க்கெட்டை சென்னைக்குள் இயங்கும் சிறுநகரெனச் சொல்லலாம். 300 ஏக்கர் பரப்பு. காமராஜர் மலரங்காடி, அண்ணா கனியங்காடி, பெரியார் காயங்காடி... சுமார்  3,187 கடைகள்... மளிகைக்கடை வியாபாரி முதல் மொத்த வியாபாரிகள் வரை தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த மார்க்கெட்டுக்கு வந்து போகிறார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த மார்க்கெட்டை நம்பி ஜீவிக்கிறார்கள். 

பழமார்க்கெட்டில் வந்து நிற்கிறது ஒரு லாரி. 

"டேய்...வீரா... சாத்துக்குடி லோடு வந்தாச்சு... பசங்களைக் கூட்டிக்கிட்டு வாடா.." 

அதிகாரக்குரல் ஒன்று ஒலிக்க, ஒரே நிறத்தில் பனியன் அணிந்த பத்துக்கும் மேற்பட்டோர் அந்த லாரியைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.  வரும் லோடை இறக்க, கொள்முதல் செய்யப்படும் பொருள்களை ஏற்ற, கடையிலிருந்து கடைக்கு தள்ளுவண்டிகளில் சுமந்துசெல்ல 3,000-த்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காய்கறி மார்க்கெட்டில் இருக்கிறார்கள். கடை உரிமையாளர்களே தங்களுக்கான தொழிலாளர்களை சம்பளத்துக்கு வைத்துக்கொள்வதும் உண்டு. தனித்து, மூட்டை கூலிக்குத் தூக்கி இறக்குபவர்களும் உண்டு. 

வீரா திண்டிவனத்தைச் சேர்ந்தவர். 95-ல் சென்னைக்கு வந்தவர். தொடக்கத்தில் ஒருவேளையும் சரியாக அமையவில்லை. தவித்து நின்றவரை கோயம்பேடு மார்க்கெட், அரவணைத்துக் கொண்டது. 

சுமை தூக்கும் வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்

"இன்னும் அஞ்சாயிரம் பேர் வந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்ல வேலையிருக்கு. கூலியில பிரச்னை இருந்துச்சு. போனவாரம்தான் சங்கம் ஆரம்பிச்சோம். இதோ இந்த பனியன் போட்டுக்கிட்டு மூட்டை தூக்குறவங்கள்லாம் நம்ம சங்கத்துக்காரங்கதான்..."- பெருமிதமாக கைநீட்டுகிறார் வீரா.  

"மழை சரிவரப் பெய்யாததால ஊர்ல விவசாயம் செய்ய முடியலே. சரி, ஏதாவது வெளிவேலைக்குப் போகலாம்ன்னாலும் அதுக்கும் வழியில்லை. இனி ஊர்ல இருந்து பிழைக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. சென்னைக்குக் கிளம்பி வந்தேன். டீக்கடை, தள்ளுவண்டி டிபன் கடையின்னு சில வேலைகள் கிடைச்சுச்சு. அதெல்லாம் நம்ம இயல்புக்கு ஒத்துவரேல  அப்படியே இந்தப் பக்கமா ஒதுங்கிட்டேன். இன்னைக்கு வரைக்கும் பிரச்னையில்லாம ஓடுது. நைட்டு 12 மணிக்கு வேலையில இறங்குவோம். லாரியில வர்ற மூடைகளை, பேரு பாத்து கடைகள்ல கொண்டு போய் அடைவோம். இறக்குற வேலை முடிஞ்சா ஏத்துற வேலை ஆரம்பமாகும். காலையில 8 மணிக்கு எல்லாக் கூலியும் கைக்கு வந்திடும். அதுக்கப்புறம் கிடைக்கிற இடத்துல ஒண்டிக்குவோம். கொசு, பன்றி, ஈயெல்லாம் பழகிடுச்சு. அதுங்ககூட நாமளும் ஒரு பிராணிதான்.

 500 ரூபாய் கிடைக்கும். நினைச்சா ஊருக்கு பஸ் ஏறிடுவேன். திருமணமாகிடுச்சு. ஒரு பையன் இருக்கான். அவன்கூட ரெண்டு நாள் இருந்துட்டு திரும்பவும் மார்க்கெட்டுக்கு வந்திருவேன்.." - சாத்துக்குடி மூட்டையை இறக்கியபடி பேசுகிறார் வீரா. 

பழ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட்டுக்குத் தனித்தனி தொழிலாளர்கள் இருக்கிறார்கள். நெடுங்காலத்துக்குப் பிறகு இப்போதுதான் இங்கே தொழிலாளர்களுக்கென சில சங்கங்கள் முளைத்திருக்கின்றன. ஆயினும் பெரும்பாலான சங்கங்களுக்கு முதலாளிகள்தாம் கௌரவ ஆலோசகர்களாக இருக்கிறார்கள். 

கோயம்பேடு மார்க்கெட் 

பழங்களை இறக்கும் பணி துரிதமாகிறது. தொழிலாளர்களைக் கண்காணிக்க, கணக்கிட என ஒவ்வொரு கடைக்கும் கணக்குப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இடையிடையே தொழிலாளர்களும் பதில் குரல் கொடுக்கிறார்கள். வார்த்தை தடித்து நாறத்தொடங்குகிறது. இரவு திகிலுறுகிறது. 

நள்ளிரவு ஒரு மணிக்கெல்லாம் காய்கறி மார்க்கெட்டும் பழ மார்க்கெட்டும் விழித்துவிடுகின்றன. லாரிகள் காய்கறிகளைச் சுமந்துகொண்டு வரிசைகட்டி வரத் தொடங்குகின்றன. இறக்கும்பணி வேகமாகிறது. 

வாழைத்தார்களை ஒரு குழு இறக்க, இன்னொரு குழு துண்டுபோட்டு அடுக்குகிறது. 

"தினமும் 600 லாரிக்கு மேல இங்கே வருது. ஒவ்வொரு காய்கறிக்கும் ஓர் ஊரு ஃபேமஸ். பீட்ரூட்டை எடுத்துக்கிட்டா கம்பம், கோலார், தேனி... முருங்கைக்காய்க்கு திருநெல்வேலி, தேனி, சிதம்பரம், வாழைக்காய்க்கு பண்ருட்டி, வேலூர், விழுப்புரம், தேங்காய்க்கு பொள்ளாச்சி, மைசூர், பேராவூரணி... முன்னல்லாம் கோயம்பேட்டுக்கான மொத்தக் காய்கறிகளும் தமிழ்நாட்டுக்குள்ள இருந்து மட்டும்தான் வரும். இப்போ அதெல்லாம் பழைய கதையாயிருச்சு. ஆந்திரா, கர்நாடகா இல்லேன்னா நமக்குக் காய்கறி கிடையாது.  வெளிமாநிலத்தை நம்பியிருக்காததால தான் விலையை நம்ம கன்ட்ரோல்ல வெச்சுக்க முடியலே..." - வருத்தமாகச் சொல்கிறார் பார்த்திபன். இவரும் மூட்டை தூக்கி இறக்கும் தொழிலாளர்தாம். 

கோயம்பேடு மார்க்கெட்

ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வோர் இடம். கொத்தமல்லிக் கட்டு மார்க்கெட்டின் கிழக்குப் பகுதியில் குவிக்கப்படும். வாழைக்காய், காய்கறி மார்க்கெட்டின் நடுவில் இருக்கும் திறந்தவெளியில். வெங்காயம், தக்காளிக்குத் தனி ஏரியா. முதல்நாளே, வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் முகவர்களிடம் ஆர்டர் செய்துவிடுவார்கள். அவர்கள் கொள்முதல் செய்து சாக்கில் கட்டி லாரியில் ஏற்றிவிடுவார்கள். விவசாயி, வியாபாரி இருவரும் சம்பாதிப்பதை விட அதிகம் காசு பார்ப்பது இந்த முகவர்கள்தாம். விலையையும் இவர்கள்தாம் தீர்மானிக்கிறார்கள். 

சாக்கின் முதுகில் முதலாளிகளின் இனிஷியல் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். பொதுவிடத்தில் நிறுத்தப்படும் லாரியிலிருந்து இனிஷியலை அடையாளம்வைத்து, அவ்வளவு துல்லியமாக மூட்டைகளைக் கொண்டுசேர்க்கிறார்கள் தொழிலாளர்கள். 

இரண்டு மணிக்கெல்லாம் கோயம்பேடு மார்க்கெட் மின்னொளியில் ஜொலிக்க ஆரம்பித்துவிடுகிறது. சரக்குகள் இறக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டுகிறது. மெள்ள, மெள்ள குட்டியானைகளும், மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பாடி வண்டிகளும் உள்ளே வருகின்றன. டீக்கேன்களைச் சுமந்துகொண்டு சுற்றும் மொபைல் டீக்கடைகாரர்களுக்கு வரவேற்பு அதிகம்.

3 மணிக்குப் பிறகுதான் விற்பனை தொடங்கும். காரணம், அதன்பிறகுதான் விலை நிர்ணயம் நடக்கும். வியாபாரிகள் சங்கத்தினர் கூடிப்பேசி, அன்றைய மொத்த விலை நிர்ணயத்தை அடிப்படையாகவைத்து கோயம்பேடு மார்க்கெட் விலையைத் தீர்மானிப்பார்கள்.  

பழ மார்க்கெட்டிலும் பரபரப்பு அதிகமாகிறது. அமெரிக்கா, இத்தாலி, நியூசிலாந்து என உலகெங்கும் இருந்து கப்பலிலும், விமானத்திலும் பயணித்து வந்து சேர்ந்த பழப்பெட்டிகள் கவர்ச்சியாக கடைகளின் முன்னால் அடுக்கப்பட்டுள்ளன. மெர்க்குரி விளக்குகளின் ஒளியில் பழங்களின் மேனி ஜொலிக்கிறது. அன்னக்கூடையைக் கக்கத்தில் இடுக்கியபடி தூக்கம் தோய்ந்த விழிகளோடு மார்க்கெட்டுக்குள் நுழைகிறார்கள் பெண்கள்.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை மட்டுமன்றி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தெல்லாம் கோயம்பேடு மார்க்கெட்டுக்குப் பழம் வாங்க வருகிறார்கள் பெண்கள். கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள், பிள்ளைகளால் துரத்தப்பட்டவர்கள் என ஆதரவற்று தவிக்கும் பலநூறு பெண்களுக்கு இந்த மார்க்கெட் தான் ஏந்தலாக இருக்கிறது. 

 மீஞ்சூரிலிருந்து அதிகாலை 2 மணிக்குக் கிளம்பியவர் கங்கா. முப்பாத்தம்மன் கோயில் அருகில் சாலையோரத்தில் பழக்கடை வைத்திருக்கிறார். 20 வருடகால உறக்கத்தை இந்தப் பழ வியாபாரம் தின்றுவிட்டது. 

"வீட்டுக்காரர் இருக்கிறவரைக்கும் இந்த அளவுக்குப் பாடில்லை. அவர் போய்ச்சேர்ந்த பிறகு திக்குத் தெரியாம நின்னேன். தெரிஞ்ச பொண்ணு ஒருத்தி இந்தப் பழ வியாபாரத்தைக் கத்துக்கொடுத்தா. இத்தனை காலத்துக்கும் இந்தப் பொழைப்புதான் காப்பாத்துது. இதை வச்சுத்தான் ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் முடிச்சேன். இந்த வயசுக்குப் பெறகும் யார்க்கிட்டயும் கையேந்தாம சாப்பிடுறேன்னா அதுக்குக் காரணம் இந்தக் கோயம்பேடுதான். பழம் வாங்கிட்டு மீஞ்சூர் போயிச்சேர 9 மணியாயிரும். அங்கேயே நாஸ்டா... இடையில யாரையாச்சும் கடையைப் பாத்துக்கச் சொல்லிட்டு வீட்டுக்குப் போயி குளிச்சுமுடிச்சு வந்துருவேன். அதுக்கப்புறம் கடைதான்..."- பளிச்சென சிரிக்கிறார் கங்கா. 

மாதுளை, திராட்சை, ஆப்பிள் மூன்றும் பெட்டி வியாபாரம். சாத்துக்குடி, சப்போட்டா,  ஆரஞ்செல்லாம் எண்ணிக்கை.  வாழைத்தாருக்கு குத்துமதிப்பான விலை.. எங்கு பார்த்தாலும் பேரம், திட்டு, பதில் வசவு, சத்தங்கள். 

பழமார்க்கெட் தேசிய மையமாக இருக்கிறது. சாத்துக்குடி ஆந்திராவிலிருந்து வருகிறது. ஆப்பிள், இமாச்சல், காஷ்மீர்.  உபி, ராஜஸ்தானிலிருந்து பழங்கள் வருகின்றன. ஆனாலும் அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து ஆப்பிள் வந்தால்தான் நம் பிள்ளைகள் ஸ்நாக்ஸ் பாக்ஸில் ஆப்பிள் கொண்டு போகமுடியும்.  திராட்சை, வாழைப்பழம், கமலா ஆரஞ்ச், கொய்யா, சப்போட்டா, பலா, மா... இவையெல்லாம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்றன. பெரும்பாலான பழங்களுக்கு ஆந்திராவைத்தான் நம்பியிருக்கிறது கோயம்பேடு. 

கோயம்பேடு மார்க்கெட்

காலை 4 மணிக்கு பூ மார்க்கெட் களைகட்டி விடுகிறது. துளசி, மரிக்கொழுந்து, ரோஜா எனக் கலவையான வாசனை ஈர்க்கிறது. பூ மார்க்கெட்டின் மையத்தில் மாலையில் வைத்துக் கட்டப்படும் இலைகள் பரபரப்பாக விற்பனையாகின்றன. உள்ளே பளீர் விளக்குகளால் பூக்களின் நிறங்களை மாற்றி மாயாஜாலம் செய்கிறார்கள் வணிகர்கள். 

கனகாம்பரம், ரோஜா தவிர அனைத்துப் பூக்களும் தமிழகத்திலேயே மலர்கின்றன. கனகாம்பரம் ஆந்திராவில் இருந்தும், ரோஜா கர்நாடகாவில் இருந்தும் வருகின்றன.  மார்க்கெட்டின் முகப்பில் விதவிதமாக மாலைகளைக் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்கள். எவரும் தங்கள் கடையைக் கடந்துவிடாதபடி வழிமறித்து விற்பனை செய்கிறார்கள். 

பாக்கெட் செய்து, கொட்டிக் குவித்து, சாக்கில் வைத்து என, விதவித வடிவங்களில் பூக்களைவைத்து விற்கிறார்கள் வியாபாரிகள். பேரமே இல்லை. ஒற்றை விலை. 

இரண்டுகைகளிலும் கனத்த பைகளைச் சுமந்தபடி வேகவேகமாக நடந்துவருகிற கௌசல்யா விழுப்புரம் சீத்தாராம் தியேட்டர் அருகில் பூ வியாபாரம் செய்கிறார். 

"ரெண்டு நாளைக்கு ஒருமுறை கோயம்பேடு வருவேன். நைட்டு 12 மணிக்கு விழுப்புரத்துல பஸ் ஏறினா 3 மணிக்கெல்லாம் இங்கே வந்திடுவேன். கொள்முதல் முடிச்சு 5 மணிக்குத் திரும்ப பஸ் ஏறுவேன். எட்டரை மணிக்கெல்லாம் விழுப்புரத்துல இருப்பேன். பத்து வருஷமா இப்படித்தான். டிரைவர் அண்ணங்கள்லாம் பழகிட்டாங்க. 'அண்ணே இன்னொரு அஞ்சு நிமிஷம் ஆகும்'ன்னு சொன்னா, பஸ்சை நிறுத்திப்போட்டு வெச்சிருப்பாங்க. இப்போகூட டிரைவர் போன் பண்ணி, "சீக்கிரம் வாம்மா"ன்னு கூப்பிட்டார்... அதுதான் அவசர அவசரமா வாங்கிக்கிட்டிருக்கேன்" என்றபடி சாமந்திப்பூவை தரம்பார்க்கிறார் கௌசல்யா. 

கௌசல்யா ஒருமுறை வந்தால் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை கொள்முதல் செய்வாராம். தீபாவளி, பொங்கல் என்றால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குவதுண்டாம். 

"வீட்டுக்காரர் டீக்கடை வெச்சிருந்தார். ரெண்டாயிரத்து ஒண்ணுல ஆக்சிடென்ட்ல இறந்துட்டார். அதுக்கு முன்னால வரைக்கும் அவருக்கு உதவி பண்ணிக்கிட்டு இருந்தேன். வேலைக்குக் கூட அனுப்பமாட்டார்.  அவர் இறந்தபிறகு 2 பிள்ளைகளோட பட்டினியைப் போக்கி எப்படி கரைசேக்குறதுன்னு தெரியலே. எங்கள மாதிரி பொம்பளைகளுக்கெல்லாம் கைகொடுக்கிற தொழில் இந்தப் பூ வியாபாரம்தான். சின்னதா ஆரம்பிச்சேன். இப்போ பெரிய கடையாயிருச்சு. கடைன்னா வாடகை கொடுத்து, லைட்டு போட்டெல்லாம் இல்லை... ரோட்டோரத்துல, தெருவிளக்கு வெளிச்சத்துலதான். ஆனா,  பெரிசா செரமம் இல்லை... வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.." - அவசர அவசரமாகப் பேருந்து நிலையத்துக்கு ஓடுகிறார் கௌசல்யா. 

கோயம்பேடு மார்க்கெட்

பூ, பழம், காய்கறிகளைச் சுமந்துகொண்டு வாகனங்கள் வெளியே கிளம்புகின்றன. அவற்றின் மேல் உறக்கத்துக்கு ஏங்கும் விழிகளோடு சுவாரஸ்யமின்றி அமர்ந்திருக்கிறார்கள் மனிதர்கள். அதுவரை மூட்டைகளைச் சுமந்த முதுகுகளை முறித்தபடி  வியர்வை வாசத்தோடு முதலாளிகள் முன் நிற்கிறார்கள் தொழிலாளர்கள்.

வானம் படிப்படியாக வெளுத்துக் கொண்டிருக்கிறது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்