வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (17/12/2017)

கடைசி தொடர்பு:18:29 (17/12/2017)

இடது கை பழக்க குழந்தைக்காக உருவான ஸ்பெஷல் ஷார்ப்னர்!

லது கை பயன்படுத்துபவர்களை விட, இடது கை பழக்கமுள்ளவர்கள் பணியில் திறன் மிக்கவர்களாகவும் தனித்தன்மையுடனும் இருப்பார்கள் என்று ஆராய்ச்சி சொல்கிறது.  மூளையின் இரு பக்கத்தையும் அவர்களால் பயன்படுத்திக் கொள்ள முடிவது அதற்கு காரணமாம்.. இடது கை பயன்பாட்டாளர்கள், விரைவாகவும் மதிநுட்பத்துடனும் முடிவுகளை எடுப்பார்கள் என்றும் இன்னொரு ஆய்வு சொல்கிறது. உலகின் தலைசிறந்த கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்களில் பலர் இடது கை பழக்கமுடையவர்களாகளே!

Letter

உலகில் தயாராகும் பெரும்பாலான பொருள்கள் வலது கை பயன்பாட்டாளர்கள் வசதிக்காகவே தயாரிக்கப்படுகின்றன. இதனால், இடது கை பயன்படுத்துபவர்களால், சாதாரண பென்சிலைக் கூட எளிதாக கூர்மைப்படுத்த முடியாது. இடக்கை பயன்பாடு என்பது குறைபாடு அல்ல. பிறவியிலேயே அமைவது அல்லது பெற்றோர் இடது கையைப் பயன்படுத்தினால், குழந்தைகள் அதைத் தொடர்கிறார்கள். 

மும்பையைச் சேர்ந்த ஸ்வேதா சிங்கிற்கு, நாலரை வயதில் மகள் இருக்கிறாள். இடது கை பழக்கம் கொண்ட அந்தக் குழந்தையால் சாதாரண பென்சிலைக் கூட சீவ முடியவில்லை. பென்சில் சீவிகள் வலது கை பயன்பாட்டாளர்களுக்காகத் தயாரிக்கப்பட்டவை. தன் குழந்தை படும் கஷ்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குழந்தையை வலது கை பழக்கத்துக்கு மாற்றவும் விரும்பவில்லை. இந்த சமயத்தில், வலது கை பழக்கத்துக்கு மாறுவது குறித்து எடுத்துச் சொன்னால், குழந்தை குழம்பிப் போவாள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். மாறாக அவர்  ஒரு காரியம் செய்தார். 

பென்சில்கள் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் நிறுவனத்துக்கு தன் குழந்தை சந்திக்கும் பிரச்னை குறித்து விரிவாக ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “ஆன்லைனில் இடது கை பழக்கமுடையவர்களுக்கான பென்சில் சீவி விலையைப் பார்த்தேன். அது ரூ.700 முதல் 1200 வரை விற்கப்படுகிறது. ஒரு பென்சில் சீவியை அவ்வளவு விலை கொடுத்து வாங்கி விட முடியுமா?  என் குழந்தை பள்ளி முடிந்து வரும் போது, சோகத்துடன் வருகிறாள். 'மற்ற குழந்தைகள் எல்லாம் எளிதாக பென்சிலை ஷார்ப் செய்து விடுகின்றனர். என்னால் முடியவில்லை' என்று கூறி அழுகிறாள். என் சூழலைப்புரிந்துகொண்டு உதவுவீர்கள் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். 

கடிதத்தைப் பார்த்து விட்டு, ‘இடது கை பயன்படுத்துபவர்களுக்காக பென்சில் சீவி தயாரிக்கிறோம்' என்று பதில் வரும் என ஸ்வேதா சிங் எதிர்பார்த்தார். ஹிந்துஸ்தான் நிறுவனத்திடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர், 'உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறோம். உதவிசெய்ய முயற்சிக்கிறோம்' என்று கூறி  விட்டு வைத்து விட்டார்.  ஒருவாரம் கடந்தது.  மேற்கொண்டு எந்தத் தகவலும் இல்லை. 'நம் குறைகளை எத்தனை முறை சொன்னாலும் கண்டு கொள்ளாத நிறுவனங்கள்தானே அநேகம். சரி... இந்த நிறுவனமும் அப்படித்தான்' என்று நினைத்துக் கொண்டார் ஸ்வேதா.

கடிதம் எழுதிய எட்டாவது நாள்... ஹிந்துஸ்தான் நிறுவனத்திடம் இருந்து ஸ்வேதாவுக்கு ஒரு பார்சல் வந்தது. ஆச்சர்யத்துடன் திறந்து பார்த்தார். உள்ளே, இடது கை பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் வகையில் 5 பென்சில் சீவிகள் இருந்தன. ஸ்வேதாவால் அதை நம்பவே முடியவில்லை. தான் எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு, தன் உணர்வுக்கு அவ்வளவு பெரிய நிறுவனம்  மதிப்பளித்ததை எண்ணி மகிழ்ந்தார். கூடவே ஒரு கடிதமும் இருந்தது. ''வழக்கமாக இடது கை பயன்பாட்டாளர்களுக்காக நாங்கள் பென்சில் சீவிகள் தயாரிப்பதில்லை. உங்கள் மகளுக்காக பிரத்யேகமாக தயாரித்துள்ளோம் '' என்று கூறப்பட்டிருந்தது.  

அவ்வளவு பெரிய நிறுவனம்,  தன் மகளுக்காக பிரத்யேகமாக பென்சில் சீவி அனுப்பி வைத்ததை, அக்கம் பக்கத்தவர்களிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தார். இந்த காலத்தில், குறையோ நிறையோ எது நடந்தாலும் ஃபேஸ்புக்கில் பதிவிடுவதுதானே வழக்கம்.  ஹிந்துஸ்தான் நிறுவனத்துக்கு நன்றி கூறி லவ்லி கஸ்டமர் சர்வீஸ் ' என ஸ்வேதா சிங் பதிவிட, 4 ஆயிரம் முறைக்கு மேல் அவரின் பதிவு ஷேர் செய்யப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்