வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (16/12/2017)

கடைசி தொடர்பு:23:00 (16/12/2017)

"எங்களைப் புதைக்க துடிக்கும் கெயில் நிறுவனம்": விவசாயிகள் வேதனை!

கொச்சி, திரவ எரிவாயு முனையத்தில் இருந்து பெங்களூரு வரை, தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் வழியாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு, 310 கிலோ மீட்டர் தூரம் குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை, செயல்படுத்த முழு முனைப்பில் இறங்கியுள்ளது மத்திய அரசு.

கெயில்
 

கெயில் திட்டத்துக்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை விதித்தார். இதை எதிர்த்து கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றம் சென்றது. அதில், தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் நிறுவனம் திட்டத்தைத் தொடரலாம் என்றும் கூறியது. இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்,  கெயில் திட்டத்தை நிறைவேற்ற பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, கெயில் திட்டம் தொடர்பாக விவசாயிகளைச் சந்தித்து, திட்டம் குறித்து விளக்கம் அளித்து, இழப்பீடு பெற்று தருவதற்காக தமிழக பா.ஜ.க சார்பில், அதன் விவசாயி அணி மாநில தலைவர் பொன்.விஜயராகவன் தலைமையில் 7 பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள்

இந்நிலையில் கட்சி சார்பற்ற விவசாயிகளின் கூட்டம், கோவையில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் நடந்தது. இதில், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாய சங்கத்தின் தலைவர் வழுக்குப்பாறை பாலு, பொதுச்செயலாளர் பேரூர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கெயில் திட்டம் தொடர்பாகவும், பா.ஜ.க அமைத்துள்ள குழு சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், கெயில் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்த பா.ஜ.க-வே, இழப்பீடு பெற்றுதருவதற்காக குழு அமைத்துள்ளது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த முயற்சியை பா.ஜ.க கைவிடவேண்டும், கெயில் நிறுவனத்திற்கு இடையூரற்ற  பயன்பாட்டாளர் என்ற அந்தஸ்தை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு வலியுறுத்துவதற்கு கண்டனம், இந்தத்திட்டம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த உயர்நிலை தொழில்நுட்ப குழுவில், பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் இணைத்து, கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கந்தசாமி

 

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயி கந்தசாமி. "கெயில் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை நெடுஞ்சாலை வழியாக நிறைவேற்றுங்கள் என்றுதான் கூறுகிறோம். ஆனால், கெயில் நிறுவனம் இதுகுறித்து தவறான தகவலை பரப்பி வருகிறது. விவசாயிகளை புதைத்தாவது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கெயில் நிறுவனம் துடிக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கெயில் திட்டத்தில் எடுத்த நிலைப்பாட்டையே, தற்போதைய தமிழக அரசும் எடுக்கும் என நம்புகிறோம். இந்த சூழ்நிலையில், இழப்பீடு பெறுவதற்காக, பா.ஜ.க குழு அமைத்திருப்பது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். கெயில் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை. அப்படி ஒருநிலை வந்தால், தமிழக பா.ஜ.க-வின் விவசாயிகளும் எங்களுடன் இணைந்து போராடுவார்கள்" என்றார்.