வெளியிடப்பட்ட நேரம்: 05:01 (17/12/2017)

கடைசி தொடர்பு:05:01 (17/12/2017)

மரபை நோக்கி ஒரு ஆன்மிக பயணம்! காஞ்சிபுரம் வந்த வரலாற்று ஆர்வலர்கள்!

பாரம்பரிய கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்வதென்பது அவசியமான ஒன்று. அதற்காக காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சோழர் வரலாறு ஆய்வு சங்கம் மற்றும் செலிபரேட் காஞ்சி ஆகிய இரு அமைப்புகள் இணைந்து பாரம்பரிய ஆன்மிக தளங்களுக்கு இரண்டுநாள் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். 'காஞ்சி மரபு நடை' என்ற இந்த நிகழ்விற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலில் இருந்து 140 பேர், காஞ்சிபுரத்திற்கு வந்திருந்தார்கள்.

காஞ்சிபுரம் கோயில்கள்

நிகழ்ச்சியின் முதல் நாளில் திருமுக்கூடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், உத்திரமேரூர் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், குடவோலை கல்வெட்டு மண்டபம், கைலாசநாதர் கோயில், ஆகியவற்றை சுற்றிப்பார்த்தனர். அப்போது அங்குள்ள கல்வெட்டுகளில் உள்ளவற்றை ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் மார்க்சிய காந்தி  வந்திருந்தவர்களுக்கு விளக்கிக் கூறினார். உத்திரமேரூர் கல்வெட்டுகளில் உள்ள குடவோலை முறை பற்றியும் தேர்தலில் போட்டியிடுபவரின் தகுதிகள் மற்றும் தகுதியின்மை குறித்தும் வந்திருந்தவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பின்பு அங்கிருந்து மாமண்டூர் பகுதியில் உள்ள குடவரை கோயிலுக்குச் சென்றனர். அங்கே பல்லவர்களின் காலத்து குடவறை கோவில்கள் பற்றியும், பல்லவர்களின் வரலாறு பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது வரலாற்று ஆய்வாளர் சசிதரன் கோயில்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும், கோயில்களின் வரலாறு குறித்தும் வந்திருந்தவர்களுக்கு விளக்கினார்.

காஞ்சிபுரம் கோயில்கள்

“கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது மட்டுமில்லாமல், அந்த கோயிலின் வரலாறு, தொன்மை, கல்வெட்டுகள் சொல்லும் சேதி என பல தகவல்களை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். வேண்டுதலுக்காகவும், நேர்த்திக்கடனுக்காகவும் மட்டுமே கோவிலுக்கு செல்லும் நிலை உள்ளது. நமது பாரம்பர்யம் இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. அவற்றை தெளிவாக கொண்டு செல்லும் நோக்கத்தோடு நாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்” என்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க