தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் ஆமை முட்டைகள் கண்டெடுப்பு பணி!

 மன்னார் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதிகளில் ஆமை முட்டைகள் கண்டெடுக்கும் பணி துவங்கியுள்ளன.

தனுஷ்கோடி பகுதியில் ஆமை முட்டை கண்டெடுப்பு

பரந்து விரிந்து கிடக்கும் கடல்பரப்பின் தூய்மை காவலனாக விளங்குவன ஆமைகள். இந்திய கடல் பரப்புகளில் 5 வகையான ஆமைகள் உள்ளன. சமீப காலங்களாக மாறிவரும் தட்ப வெட்ப சூழலாலும், சுற்றுச்சூழல் மாசினாலும், மனிதர்களின் இரக்கமற்ற செயலாலும் இந்த ஆமை இனங்கள் அருகி வருகின்றன. ஆமை இனங்கள் கடலில் வாழ்ந்தாலும் அவை  முட்டை இட்டு குஞ்சு பொறிப்பதற்கு கடற்கரையோர மணல் பரப்புகளையே நாடி வருகின்றன. ஆமைகள் உருவாகும் கடலோரப் பகுதிகள் சமீப காலமாக கட்டுமானம், சாலைகள், கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் போன்றவையாக மாறி வருகின்றன. இதனால் தங்களின் வாழ்விட சூழலை இழந்து தவிக்கின்றன ஆமைகள்.

பொதுவாக ஆமைகள் டிசம்பர் துவங்கி மார்ச் மாதம் வரையில் முட்டையிட துவங்குகின்றன. தனுஷ்கோடியின் வட கடல் பகுதியான பாறடி முதல் அரிச்சல்முனை வரை ஆமைகள் முட்டையிடும் பகுதியாகும். தமிழக கடலோர பகுதிகளில் இந்த ஆண்டு முதன் முதலாக தனுஷ்கோடி கடலோர பகுதியில் ஆமை முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இன்று காலை அரிச்சல் முனை பகுதியில் மண்டபம் வன உயிரின காப்பகத்தின் வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வன ஊழியர்கள் சித்தாமை முட்டைகளை சேகரித்தனர். இந்த சேகரிப்பின் போது 128  முட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு நடந்த ஆமை முட்டை சேகரிப்பின் போது 98 முட்டைகள் கிடைத்தன. இம்முறை கூடுதலான முட்டைகள் கிடைத்திருப்பதால் இந்த ஆண்டு அதிக ஆமை குஞ்சுகள் பொறிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கண்டெடுக்கப்பட்ட முட்டைகள் அனைத்தும் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள குஞ்சு பொறிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!