வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (17/12/2017)

கடைசி தொடர்பு:16:10 (17/12/2017)

நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

 இந்திய கடல் பகுதியில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவரை ராமேஸ்வரம் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.

இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மரியதாஸ், அண்ட்ரன் ஆகிய இருவரும் நேற்று மீன் பிடிப்பதற்காக பைபர் படகு ஒன்றில் கடலுக்கு சென்றுள்ளனர். இலங்கை கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி, அவர்களது படகு கடலில் மூழ்கியது. இதனால் மீனவர்கள் இருவரும் கடலில் தத்தளித்தனர்.

இந்நிலையில், நேற்று  ராமேஸ்வரத்தை சேர்ந்த அந்தோணி அடிமை என்பவரது படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் உயிருக்கு போராடிய  நிலையில் தத்தளித்து கொண்டிருந்த இலங்கை மீனவர் மரியதாஸை காப்பாற்றி, அவருக்கு முதலுதவி செய்து தங்கள் படகில் ராமேஸ்வரம் அழைத்து வந்தனர். ராமேஸ்வரம் அழைத்து வரப்பட்ட இலங்கை மீனவர் மரியதாஸை, மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர். போலீஸார் மரியதாஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கிய மற்றொரு மீனவரான அண்ட்ரன் உயிரிழந்து விட்டதாக தெரிகிறது.