’சிதிலமடைந்து கிடக்கும் தனுஷ்கோடி புயல் நினைவுச் சின்னம்!’ - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

1964-ம் ஆண்டு ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்கள் நினைவாக  அமைக்கப்பட்ட தனுஷ்கோடி நினைவு தூண் பராமரிப்பு ஏதும் இன்றி பாழ்பட்டு கிடக்கிறது.


தனுஷ்கோடி புயல் நினைவு தூண்

கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி இரவு இலங்கை வழியாக உருப்பெற்று வந்த ஆழிப்பேரலை துறைமுக நகரமாக விளங்கிய தனுஷ்கோடியை மூழ்கடித்து சின்னாபின்னமாக்கியது. இந்த ஆழிப்பேரலையில் சிக்கிய தனுஷ்கோடி ரயில் நிலையம், துறைமுகம், அரசு அலுவலகங்கள், வீடுகள், வியாபார நிறுவனங்கள் இவற்றோடு விலைமதிப்பு இல்லாத நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் கடலுக்குள் போனது. அப்போது, பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற ரயிலையும் கடல் அலை இழுத்து சென்றது. இதில் பயணித்த கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

அன்று முதல் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட தனுஷ்கோடி பகுதியில் மீனவர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தங்கியிருப்பதுடன், ஆழிப்பேரலை பாதிப்புகளின் சுவடுகளைக் காண சுற்றுலா பயணிகளும் சென்று வருகின்றனர். புயலின் கோரத்தை விவரிக்கும் வகையிலும், கடல் கொந்தளிப்பில் உயிரிழந்தவர்கள் நினைவாகவும் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் நினைவு தூண் ஒன்று கடந்த 2004-ல் அமைக்கப்பட்டது. மண்டபம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினால் அமைக்கப்பட்ட இந்த நினைவுத் தூணை அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி திறந்து வைத்தார்.  

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் வசதி, சோலார் மின் விளக்கு வசதி என மெல்ல மெல்ல உயிர்பெற்று வரும் தனுஷ்கோடியில், புயலில் உயிர்நீத்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூண் மட்டும் கேட்பாரற்று சிதைந்த நிலையில் நிற்கிறது. இன்னும் சில நாட்களில் ஆழிப்பேரலையின் கோரதாண்டவம் நடந்த 54-ம் ஆண்டு நினைவுதினம் கடைபிடிக்கப்பட உள்ளது. அதற்கு ஏதுவாக சிதைந்து கிடக்கும் இந்த நினைவு சின்னத்தை சீரமைக்க அரசு முன் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!