வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (17/12/2017)

கடைசி தொடர்பு:09:15 (18/12/2017)

ஆளுநருடனான புகைப்படத்துக்கு ரூ. 500 வசூல்! - நெல்லை பல்கலைக்கழகத்தை சுற்றும் சர்ச்சை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கு 500 ரூபாய் வசூல் செய்யப்படும் சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆளுநர் புகைப்பட வசூல்

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழா டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு 46,219 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க ஒப்புதல் அளித்தார். பல்கலைக் கழகத்தில் அவர், நேரடியாக 752 பேருக்கு பட்டம் வழங்கினார். அவரிடம் பட்டம் பெற்ற அனைவரையும் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் புகைப்படம் எடுக்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவுக்கான புகைப்படம் எடுக்கும் அனுமதி தனியார் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அனைவரையும் புகைப்படம் எடுத்தனர். அந்தப் புகைப்படங்களை உரியவர்களிடம் வழங்க பல்கலைக் கழகம் 500 ரூபாய் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்களில் சிலரிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லை என்ற போதிலும், கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆர்ப்பாட்டம்

இதைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் மாவட்ட அமைப்பாளரான சுந்தர்ராஜ் தலைமையில் நெல்லை சந்திப்பு பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பல்கலைக் கழக நிர்வாகத்தின் கெடுபிடியான வசூலைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். பட்டமளிப்பு விழாவுக்காக மாணவர்களிடம் தனியாக பணம் வசூல் செய்யப்பட்ட நிலையில், புகைப்படத்துக்குப் பணம் வசூல் செய்வதைக் கண்டித்தனர்.

இதுபற்றிப் பேசிய அந்த அமைப்பினர், ’’மாணவர்களிடம் இருந்து ஏற்கெனவே பணம் வசூல் செய்யப்பட்ட நிலையில், புகைப்படத்தை வாங்க கட்டாய வசூல் செய்வது கண்டிக்கத்தக்கது. பட்டமளிப்பு விழாவின்போது ஆளுநருடன் மாணவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இலவசமாக வழங்க வேண்டும். இதற்காக வசூல் செய்யப்பட்ட பணத்தை மாணவர்களிடம் உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்கள். ஆளுநருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துக்காக 500 ரூபாய் வசூல் செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.