வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (18/12/2017)

கடைசி தொடர்பு:16:44 (12/07/2018)

'நாடாளுமன்றத்தில் திருக்குறள்' நிகழ்ச்சியின் இரண்டாம் ஆண்டு விழா!

   

நாடாளுமன்றத்தில் திருக்குறள் நிகழ்ச்சியின் இரண்டாம் ஆண்டு விழா கரூரில் நடைபெற்றது. தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், மொத்தம் 133 இடங்களில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் ஆர்வலரும், நாடு தழுவிய திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பின் தலைவரும், உத்தரகாண்ட் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தருண் விஜய்யால் 'நாடாளுமன்றத்தில் திருக்குறள் நிகழ்ச்சி பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது. தேசியத் தலைநகர்  தமிழுக்கும், திருக்குறளுக்கும் மகுடம் சூட்டிய அந்நிகழ்ச்சியில், திருக்குறளில் சிறந்த 133 தமிழக மாணவ மாணவியருக்கு 'திருக்குறள் செல்வர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மூத்த பத்திரிகை ஆசிரியர் வைத்தியநாதன், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜோ டி குரூஸ், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோருக்கு 'திருவள்ளுவர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 இந்திய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், 'உலகப் பொதுமறை' திருக்குறள், அனைவரையும் ஒன்றுபடுத்தியது. மேலும், திருக்குறளில் சிறந்த 133 மாணவ மாணவியரையும் அப்போதைய மேனாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து தேநீர் விருந்தளித்துப் பாராட்டினார்.  

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியில், திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன் சிறப்பு விருந்திரனராகக் கலந்துகொண்டார். அப்போது 133 பள்ளி, கல்லூரிகளில் 'திருக்குறள் முற்றோதல்' செய்யும் இயக்கத்தை புதுடெல்லியிலி ருந்து காணொளிக் காட்சிமூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தொடங்கிவைத்தார்.
 விழாவில் பேருரையாற்றிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் இ.ராம்கணேஷ்,

"எக்காலத்துக்கும், எல்லா வயதினருக்கும், எல்லா கலாசாரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும் உலகப் பொதுமறை திருக்குறள். தமிழகம் உலகத்திற்கு அளித்த பெரிய பரிசு, திருக்குறள். திருக்குறளை நாம் அனைவரும் கற்று, அதன்படி நடக்க வேண்டும். திருக்குறளை இந்தியா முழுவதும் கொண்டுசெல்ல பெரும் தொண்டாற்றிவரும் தருண் விஜய் முயற்சியைப் பாராட்டி வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.  
 திருக்குறள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 'திருக்குறள் செல்வர்' பட்டம் பெற்ற கரூர் மாணவி சுகன்யா, அவரது குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற அனுபவங்களையும், நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட திருக்குறள் நிகழ்ச்சியின் அனுபவங்களையும் நினைவுகூர்ந்தார். பின்னர், திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.