”யானைங்க கூட போராடுறோம்... கொசு வலை மாதிரி சீருடை தந்தா எப்படி?” - வேட்டைத் தடுப்புக் காவலர்களின் அவலநிலை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தாயைப் பிரிந்து பள்ளத்தில் கிடந்த குட்டியானையை, மீட்ட வனத்துறைக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. அந்தக் குட்டியானையை தனது தோளில் அலேக்காக தூக்கி வந்தவர் பெயர் சரத்குமார். இவர் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், வேட்டைத் தடுப்புக் காவலராக உள்ளார். தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளில் யானைகளை விரட்டுவது, யானைகளை பள்ளங்கள், சகதிகளில் இருந்து மீட்பது, சமூக விரோதிகளிடம் இருந்து காட்டைப் பாதுகாப்பது, புலிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது, என களத்தை கலக்குபவர்கள் இந்த வேட்டைக் காவலர்கள்தாம்.

வேட்டைத் தடுப்பு காவலர்கள்

ஆனால், அவர்களுக்கான அடிப்படை விஷயங்கள்கூட கிடைக்காத அவலம்தான் தொடர்ந்து நடந்துவருகிறது. 24 மணி நேரம் வேலை, மிகவும் குறைந்த சம்பளம், பாதுகாப்பின்மை, வனத்தை காப்பதற்கு அடிப்படை உபகரணங்கள்கூட இல்லாமல் இருப்பது என இவர்களின் சோகம் பெரியது.

கோவையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைத் தாக்கி 5 பேர் பலியானார்கள். அவர்கள் 5 பேரைத் தாக்குவதற்கு முன்பு யானைத் தாக்கியது, கார்த்திகேயன் என்ற வேட்டை தடுப்புக் காவலரைத்தான். உயிரிழந்தவர்களை நேரில் வந்து பார்த்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, கார்த்திகேயனை பார்க்கவில்லை. வனத்துறையில் உள்ள சில நல்ல அதிகாரிகள் மற்றும் சக வேட்டைத் தடுப்புக் காவலர்களின் உதவியால்தான் கார்த்திகேயன் சிகிச்சை பெற்றார்.

வேட்டைத் தடுப்பு காவலர்கள்

இதையடுத்து எதிர்ப்புகள் எழவே, தற்போது வேட்டைத் தடுப்புக் காவலர்களின் ஊதியம் 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தொகையும் அவர்களின் கையில் முழுமையாக சென்று சேரவில்லை என்று குற்றச்சாட்டும் உள்ளது.

தமிழ்நாடு வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். "தமிழகத்துல 908 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இருக்கோம். இப்பவும் 850 காலிப் பணியிடங்கள் இருக்கு. ஒரு வேட்டைத் தடுப்புக் காவலர் 10 வருஷம் வேலை செஞ்சா, அவர பணி நிரந்தரம் பண்ணணும்னு அரசாணை சொல்லுது. ஆனா, 20 வருஷத்துக்கு மேல வேலை செஞ்சும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் பலர் இருக்காங்க. பணி நிரந்தரம் செய்யப்படாமயே பலர் வேலைய விட்டுப் போய்ட்டாங்க, 50 வயசுக்கு மேற்பட்டோர் 30% பேர் இருக்காங்க. 20 % பேர் பட்டதாரிங்க. 25 – 40 வயசுல 20 % பேர் இருக்காங்க. இன்னிக்கு இல்லாட்டி நாளைக்கு நம்மள நிரந்தரம் பண்ணிருவாங்கணு நம்பிக்கைல ஓடிட்டு இருக்கோம். ஃபாரஸ்ட்ல வேலைன்ணு ஒரு போதைல வந்தடறோம். அந்தப் போதைதான் விடமாட்டிங்குது.

வேட்டைத் தடுப்பு காவலர்கள்

எங்களுக்கு கொடுக்கற ஜெர்க்கின், சீருடைகள் தரமில்லாம இருக்கு. கொசுவேலை போல இருக்கற அத மாட்டிக்குட்டுதான் பணி செய்யறோம். பகல் எல்லாம் ரோந்துப் பணி, இரவு நேரத்துல ரொம்ப அலர்ட்டா இருக்கணும். கோவை மாவட்டத்துல இருக்கற 136 வேட்டைத் தடுப்புக் காவலர்களும் இரவு நேரத்துல வனப்பகுதிலதான் இருப்போம். ஆனா, அவங்களுக்கு டீ, சாப்பாடுகூட வாங்கித்தர்றது இல்ல. இரவு நேரத்துல ஒரு ரேஞ்சுல 25 பேர் பணில இருப்போம். ஆனா, கைல 5 டார்ச் லைட்தான் இருக்கும். அத வெச்சுதான் மாத்தி, மாத்தி வேலை பார்க்கணும். சமூக ஆர்வலர்கள் கொடுக்கற டார்ச் லைட்டையும், ரேஞ்சர்கள் எங்கக்கிட்ட கொடுக்க மாட்றாங்க. யானைகள் வந்தா விரட்ட பட்டாசுங்களும் கம்மியாதான் இருக்கு" என்றனர்.

கோவையில் 25 வருடங்களாக பணியாற்றிவரும் வேட்டைத் தடுப்புக் காவலர் ஒருவர், "குடும்பத்த மறந்துட்டுதான் இந்த வேலைக்கு வரணும். கிடைக்கற நேரத்துல வீட்டுக்குப் போய்ட்டு வருவோம். தீபாவளி, பொங்கல் பண்டிகைலாம் நாங்க கொண்டாடறதே இல்ல. வேட்டையாடறத தடுக்க, பண்டிகை நாள்களில் ஸ்பெஷல் ரோந்துப் பணிகள்ல இருப்போம். இப்பதான் ஏதோ சமூக ஆர்வலர்களின் உதவில இன்ஷூரன்ஸ் தொடங்கிருக்கோம்.

வேட்டைத் தடுப்பு காவலர்கள்

எவ்வளவோ கஷ்டப்பட்டு வன விலங்குகளோட மல்லுக்கட்டிட்டு இருக்கோம். எங்கப் பணியைப் பாராட்டி ஒரு சர்ட்டிஃபிகேட்கூட கொடுக்க மாட்டாங்க. அப்படி சர்ட்டிஃபிகேட்லாம் கொடுத்தா, இன்னும் பூஸ்ட்டா வேலை செய்வோம்" என்றார்.

பேராண்மை படத்தில், ஜெயம் ரவி செய்யும் சாதனைகளுக்கு, பொன்வண்ணன் பெயரைத் தட்டிச்செல்வார். துருவன்களும், சரத்குமார்களும்தான் வனத்தைக் காக்கும் வனமகன்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அவார்டு கொடுத்து அங்கீகரிக்காவிட்டாலும், அடிப்படை வசதிகளையாவது வனத்துறை நிறைவேற்ற வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!