ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

`ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பிக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு 11-டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில், 21.12.2017 அன்று நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

* கடவுச்சீட்டு
* ஓட்டுநர் உரிமம்
* மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன்கூடிய பணி அடையாள அட்டைகள்.
* வங்கி/ அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன்கூடியது).
* நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card).
* தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை.
* தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு.
* புகைப்படத்துடன்கூடிய ஓய்வூதிய ஆவணம்.
* தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச் சீட்டு.
* பாராளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.
* ஆதார் அட்டை    

ஒரு வாக்காளர், வேறொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால், அந்த அடையாள அட்டையையும் இந்தியத் தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்திவிட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால்தான், அவர் வாக்குரிமை செலுத்தத் தகுதியுடையவர் ஆவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!