வைகை நீருக்காகப் போராடிய 277 பேர்மீது போலீஸ் வழக்குப்பதிவு!

வைகை ஆற்று நீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட  ஆர்.காவனூர் கிராம மக்கள் 277 பேர் மீது, ராமநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக, கடந்த 5-ந் தேதி வைகை ஆற்றுத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. குடிநீர் தேவைக்காக மட்டுமே வைகை நீர் திறக்கப்பட்டதால், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீர் திறக்கப்படவில்லை. காருகுடி மதகு வழியாக ஐயர்மடம் ஊரணி, முகவையூரணி, லட்சுமிபுரம் ஊரணி ஆகியவற்றில் நீர் நிரப்பபட்ட நிலையில், ஆர்.காவனூரில் உள்ள ஊரணிக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்படவில்லை.

வைகை நீர் கேட்டு சாலை மறியல் செய்த ஆர்.காவனூர் மக்கள் 
 

இதைக் கண்டித்து ஆர்.காவனூர் ஊரணிக்கு தண்ணீர் கேட்டு நேற்று அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ராமநாதபுரம்-நயினார் கோயில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர் பேபி, ராமநாதபுரம் ஊரணிகள் முழுதும் நிறைந்தவுடன், காவனூர் ஊரணிக்குத் தண்ணீர் திறப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைந்துபோகச் சொல்லி போக்குவரத்தை சீர்செய்ய முயன்றனர். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்றை மறியலில் ஈடுபட்டவர்கள் தடுக்க முயன்றதால், போலீஸாருக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரு இளைஞர்களை போலீஸார் கைதுசெய்தனர். அதைக் கண்டித்து, கிராம மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர்.  இந்நிலையில், ஆர்.காவனூரில் சாலை மறியல்செய்த  124 ஆண்கள், 153 பெண்கள் உள்ளிட்ட 277 பேர்மீது ஆர்.காவனூர் கிராம நிர்வாக அதிகாரி முத்தையா கொடுத்த புகாரின் பேரில், ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!