'தோல்வியுடன் திரும்பும்போது பல வலிகளை அனுபவித்தேன்'- ஐ.ஏ.எஸ் அதிகாரி நெகிழ்ச்சி

மதுரையில் கம்பன் கழகம் நடத்திய பாரதி-அவ்வை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட தலைமை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன், ''தாய்மொழியில் பயில்வதும் பேசுவதுதான் நமக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். எனக்கு ஆங்கிலம் தெரிந்தும்  ஐ.ஏ.எஸ் தேர்வை தமிழ் மொழியில் விரும்பி எழுதினேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியாளராக முதலிடத்தில் வெற்றிபெற்ற நான், சிறுவயதுக் கனவான ஐ.ஏ.எஸ் ஆக வேண்டுமென்ற லட்சியத்தால் பயிற்சியெடுத்தேன். தமிழில் எழுதினேன். ஏழாவது முறையாக வெற்றிபெற்றேன். ஒவ்வோர் ஆண்டும் நேர்முகத்தேர்வுக்குச் சென்றுவிட்டு தோல்வியுடன் திரும்பும்போது, பல வலிகளை அனுபவித்தேன். அந்த வலியை மறக்க, எனக்குத் துணைநின்றவர்கள், பாரதியும் விவேகானந்தரும்தான். அவர்களைப் பற்றிய புத்தகம்தான் எனக்கு ஊக்கசக்தி.

தமிழில் ஐ.ஏ.எஸ்.எழுதலாம்


ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு நாம்  எதையெல்லாம் படிக்கிறோமோ அவை கண்டிப்பாக வராது. அதையும் தாண்டிய வாசிப்பு நமக்கு வேண்டும். அதைவிட மன உறுதி வேண்டும். சிறந்த படிப்பாளிகள், ஐ.ஏ.எஸ்ஸில் தேர்வாகாததற்கு அடிப்படைக் காரணம்,  மனஉறுதி இல்லாததுதான். மனஉறுதியுடன் இருந்தால், தமிழில் எழுதி வெற்றிபெறலாம். அதுபோல, நன்றி சொல்லும் பழக்கம் நம்மிடம் வேண்டும். அனைத்துக்கும் நன்றி சொல்லும் பழக்கம் ஜப்பான் மக்களிடம் உள்ளது. நாம் தெரியாமல் காலை மிதித்துவிட்டால்கூட அவர்கள் நன்றி சொல்கிறார்கள். அதனால்தான், அணுகுண்டு வீச்சுக்குப் பின் வேகமாக முன்னேறினார்கள். அதுபோல நாமும் நமக்கு உதவுவோர் அனைவருக்கும் நன்றி சொல்வோம். அது ஒரு நல்ல பழக்கம்'' என்று உற்சாகமாகப் பேசினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!