வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (18/12/2017)

கடைசி தொடர்பு:14:05 (18/12/2017)

'இஸ்லாமியக் கைதிகளிடம் தமிழக அரசு பாரபட்சம்' : இந்திய தேசிய லீக் கட்சி குற்றச்சாட்டு

20 ஆண்டுகளாக, கோவை சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் ஜஃப்ரூ என்பவரை விடுதலைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

ஜஃப்ரூ

கோவையைச் சேர்ந்த ஜஃப்ரூ என்ற சையது ஜாபர் அஹமது என்பவர், கொலைவழக்கு ஒன்றில், கடந்த 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாக, கோவை மத்திய சிறையில் இருக்கிறார். இந்நிலையில், 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஜஃப்ரூவை விடுதலை செய்ய வேண்டும் என்று, இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜஃப்ரூ மீது வேறு வழக்கு இல்லாதபட்சத்தில், அவரை விடுதலைசெய்யலாம் என்று கடந்த 14-ம் தேதி தீர்ப்பளித்தது.

ஆனால், ஜஃப்ரூ விடுதலை செய்யப்படவில்லை. இதையடுத்து, ஜஃப்ரூவை விடுதலைசெய்யாத சிறைத்துறையைக் கண்டித்து, இந்திய தேசிய லீக் கட்சியினர், கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான இஸ்லாமியப் பெண்கள் கலந்துகொண்டனர். அப்போது, ஜஃப்ரூவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தடா ரஹீம்," உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அதன் உத்தரவை நிறைவேற்ற சிறைத்துறை மறுத்துவருகிறது. தமிழக அரசும் சிறைத்துறையும் இஸ்லாமியக் கைதிகளிடம் தொடர்ந்து பாரபட்சம் காட்டிவருகின்றன. பல இஸ்லாமிய ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு பரோலே வழங்கப்படுவதில்லை. அப்படியே வழங்கினாலும் கடுமையான கெடுபிடிகளுடனே அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க