ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன 5 மாத குழந்தையின் உயிர்! சோகத்தில் 7 பேர்

ஓட்டுநரின் அலட்சியத்தால், 5 மாத குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் தொடரும் சாலை உயிரிழப்புகளால் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள், மக்கள்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகேயுள்ள இனாம் குளத்தூரைச் சேர்ந்த ஜாபர் அலி- ஜாஸ்மின் குடும்பத்தினரும், முசிறியைச் சேர்ந்த சல்மான் ஃபாரூக் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சென்னையில் படிக்கும் அவர்களது மகன்களைப் பார்த்துவிட்டு,  வேனில் சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். சென்னையிலிருந்து திருச்சி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தது. பெரம்பலூர் அருகேயுள்ள தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் வேன் வந்தபோது, ஓட்டுநர் சல்மான் ஃபாரூக் சற்றுக் கண் அசரவே, கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் ஓரமாக இருந்த பாலத்தின் தடுப்புச் சுவர்மீது மோதி, அருகில் இருந்த  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், வேனில் பயணம்செய்த அக்பர் அலியின் மனைவி சபீராபீவி, ஜாபர் அலியின் ஐந்து மாத பெண் குழந்தை அலிமா ஆகியோர் பலமாக அடிபட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். அப்துல் அஜீஸ், உசேன் முகமது, ஆய்ஷா, காதர் உள்ளிட்ட 7-க்கும்  மேற்பட்டோர், பலத்த காயங்களுடன் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்தில் பலியான சபீராபீவி மற்றும் கைக்குழந்தை ஆகிய இருவரது உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை விபத்துகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!