பா.ஜ.க-வைப் பதறவைத்த போராளி ஜிக்னேஷ் மேவானி வெற்றி!

ஜிக்னேஷ் வெற்றி

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிட்ட தலித் உரிமைச் செயற்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரைவிட 19,696  வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகியுள்ளார். 

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம் தனித் தொகுதியில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 90,375 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இங்கு போட்டியிடப் போவதாக ஜிக்னேஷ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, போட்டியிடாமல் விலகிக்கொள்வதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்தன. பா.ஜ.க-வின் சார்பில் போட்டியிட்ட விஜய் சக்கரவர்த்திக்கும் ஜிக்னேஸுக்கும்தான் போட்டி எனும்நிலையில், ஜிக்னேஸுக்கு 95,497வாக்குகள் கிடைத்தன. பா.ஜ.க வேட்பாளர் 75,801 வாக்குகள் மட்டுமே பெறமுடிந்தது. 

கடந்த ஆண்டு, சௌராஷ்டிரா பகுதியான உனாவில், மாட்டின் தோலை உரித்ததாகத் தலித் மக்கள் நான்கு பேரை மதவெறியர்கள் கடுமையாகத் தாக்கி வன்கொடுமை செய்ததை எதிர்த்து, அந்தப் பகுதியில் எழுச்சிப் பேரணியை நடத்தியதன்மூலம் பிரபலமானவர், ஜிக்னேஷ் மேவானி. தலித் மக்களின் உரிமைகளுக்காக, குறிப்பாக பா.ஜ.க-வின் அரசியலை எதிர்த்து குஜராத் மாநிலத்தில் தொடர் பிரசாரம், பேரணி நடத்தினார். நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கானோர் அந்தப் பேரணியில் பங்கேற்றனர். 

 

 

எந்த உனா நகரில் நான்கு தலித் மக்களுக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டதோ, அதே ஊரை நோக்கி அகமதாபாத் நகரிலிருந்து பேரணியாகச் சென்று, ஆகஸ்ட் 15-ம் தேதி அங்கு பொதுக்கூட்டம் நடத்தினார், மேவானி. அரசியல் கட்சிகளின் கூட்டத்தை விஞ்சும் வகையில் அந்தக் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!