அரசு அதிகாரிகள் ஆளுநரின் கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

"அரசு அதிகாரிகள் ஆளுநரின் கூட்டங்களுக்குச் செல்லக் கூடாது என்பதைத் தமிழக முதல்வர்தான் அறிவுறுத்த வேண்டும்” எனப் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

சிதம்பரம்

கோவை, நெல்லை, கடலூர் எனத் தன் ஆய்வுப் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். முதலில் கோவை மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாகச் சென்ற ஆளுநர், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆய்வுசெய்தார். ஆளுநரின் ஆய்வால் தமிழகத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. ``ஆளுநரின் செயல்பாடு மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது” என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன. 

இந்நிலையில், ஆளுநரின் தொடர் ஆய்வு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக ஆளுநரின் அறிக்கை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. மாநில ஆளுநர் என்பவர் பெயரளவிலான நிர்வாகி. உண்மையான நிர்வாகத் தலைவர் மாநில முதல்வர்தான். மத்திய அரசைக் கண்டு முதல்வர் அச்சப்படுவதால் ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார். ஆய்வுக்கூட்டங்களுக்கு ஆளுநர் அழைத்தால் செல்ல வேண்டாம் என முதல்வர் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று நேற்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று, ``வகிக்கும் பதவிக்கு மதிப்பு அளிக்கும் வகையில், ஆளுநர் அழைப்பு விடுக்கும் கூட்டங்களில் பங்கேற்க மறுப்பு தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாக அரசு அதிகாரிகளைத் தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்த வேண்டும்” எனப் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!