“இப்படி நடக்கும் என்று சத்தியமா எதிர்பார்க்கலை!" - போலீஸ் அதிகாரிகளிடம் அழுத முனிசேகர்

பெரியபாண்டியன் உடல்

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளைக் கண்டு அதிர்ந்துபோய் உள்ளது, தமிழக காவல்துறை. 'முனிசேகர்தான் பெரியபாண்டியைச் சுட்டார்' என ராஜஸ்தான் மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது, புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொளத்தூர் கொள்ளைச் சம்பவத்துக்காக ராஜஸ்தான் சென்ற மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், பிணமாகத் திரும்பிவந்தார். இந்த வழக்கில், தமிழக போலீஸ் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு சில முக்கிய தகவல்களைக் கூறியுள்ளனர் ராஜஸ்தான் போலீஸ் உயரதிகாரிகள். இந்த வழக்குகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், " கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் வந்த தமிழக போலீஸார், கொள்ளையர்கள் தங்கியிருந்த இடத்தை  அவர்கள் சுற்றி வளைத்தபோது, பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெரியபாண்டியனைத் தனியாக விட்டுவிட்டு மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இப்படியொரு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படப்போவதுகுறித்து ராஜஸ்தான் போலீஸாருக்கு எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. ‘கொள்ளையர்களுடனான மோதலில், முனிசேகரின் துப்பாக்கியைப் பறித்த கொள்ளையர்கள், பெரியபாண்டியனைச் சுட்டுக் கொன்றுவிட்டனர்' என்றுதான் தகவல் வெளியானது. இதுகுறித்து ராஜஸ்தான் சென்ற தமிழக தடயவியல் அறிஞர்கள் தீவிர ஆய்வை நடத்தினர். கொள்ளையர்கள் தாக்க வந்தபோது, தற்காப்புக்காகக்கூட பெரியபாண்டியன் அவருடைய துப்பாக்கியைப் பயன்படுத்தவில்லை. இதில், எந்தச் சூழ்நிலையில் முனிசேகர் துப்பாக்கியைத் தூக்கினார் என்பதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றார். 

பெரியபாண்டியன் கொல்லப்பட்ட விவாகரத்தில், ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்த ராஜஸ்தானின் ஜெயத்ரன் போலீஸார், தேஜாராம், அவரது மனைவி ஸ்ரீமதிபிரியா மற்றும் மகள் சுகுனா ஆகியோரைக் கைதுசெய்தனர். இதில், சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாகக் கூறியிருக்கிறார் தேஜாராம். நாதுராமை கைதுசெய்து விசாரித்தால்தான் முழு விவரங்களும் தெரியவரும் என்கின்றனர் ராஜஸ்தான் போலீஸார். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சென்னை திரும்பிய தமிழக தனிப்படை அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் காவலர்கள் எம்புரோஸ், சுதர்சன், குருமூர்த்தி ஆகியோரிடம் நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்துள்ளனர். அப்போது, இன்ஸ்பெக்டர் முனிசேகர் நடந்த உண்மையைக் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழக போலீஸ் உயரதிகாரிகள், ‘ராஜஸ்தான் போலீஸார் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துப் பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூறியுள்ளனர். இதை உயர் அதிகாரிகள் அறிக்கையாகக் கொடுக்க, ' நாமே சுட்டுவிட்டோம் என்றால், நமக்குத்தான் அவமானம்' எனத் தெரிவித்துள்ளனர். அதோடு, ' இந்த விவகாரம்குறித்து யாரும் மீடியாக்களிடம் பேச வேண்டாம்' என உள்துறை அதிகாரிகள் கண்டிப்புடன் கூறிவிட்டனர். 

பெரியபாண்டியன்

இந்த விவகாரம்குறித்துப் பேசிய பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா, ‘நடந்த சம்பவத்தை மனசாட்சிப்படி முனிசேகர் தெரிவிக்க வேண்டும். உயர் அதிகாரிகள் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்’ எனக் கூறினார். இந்த வழக்கில், முனிசேகர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். “முனிசேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும்போது, அவருக்கு பதவி உயர்வு கிடைக்காது. அடுத்து, அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டணை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், முக்கிய பொறுப்பில் அவர் பணியமர்த்தப்பட மாட்டார்” என்றார். 

நேற்று, முனிசேகரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் ஒருவர். ‘போனில் வேண்டாம், நேரில் பேசுவோம்’ என்று கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து, முனிசேகரை அவர் சந்தித்துப் பேசினார். தொடக்கத்திலேயே, ' இப்படியெல்லாம் நடக்கும் என்று கொஞ்சம்கூட நான் எதிர்பார்க்கவில்லை' எனக் கூறிவிட்டு அழுதிருக்கிறார். இதற்கு மேல் எந்த விஷயத்தையும் அவர் பேசவில்லை. "முனிசேகர் மற்றும் பெரியபாண்டியனின் துப்பாக்கிகளை ஆய்வு செய்த ராஜஸ்தான் மாநில தடய அறிவியல் துறை நிபுணர்கள், பெரியபாண்டியனின் உடலைத் துளைத்தது முனிசேகரின் துப்பாக்கிக் குண்டுதான் என்று சொல்லி வருகின்றனர். ஆனால், வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. ராஜஸ்தான் மாநில போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நாதுராமை கைதுசெய்து தமிழகத்துக்குக் கொண்டுவர ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீம் எத்தகைய சூழலையும் சமாளிப்பார்கள். நாதுராம் கைது செய்யப்பட்டால்தான், பெரிய பாண்டியன் மரணத்துக்கான உண்மையான காரணம் வெளியில் வரும்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!