வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (18/12/2017)

கடைசி தொடர்பு:16:30 (18/12/2017)

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு! சரத்குமார் ஆரூடம்

“ஆர்.கே.நகரில் தேர்தலை நியாயமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடத்த வேண்டும். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்திருப்பதால் ஆர்.கே.நகரில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதுபோலத் தெரிகிறது” என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

sarathkumar

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு மீனவர்கள், விவசாயிகளைச் சந்தித்த பின், இரவில் திருச்செந்தூர் வந்த சரத்குமார், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான பகுதியைப் பார்வையிட்டார். பின்னர், இந்த விபத்தில் உயிரிழந்த பேச்சியம்மாளின் இல்லத்துக்குச் சென்று அவர் மகள் சுமதி, மகன் சுரேஷ் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு ரூ.10 ஆயிரத்தை இழப்பீட்டுத்தொகையாக வழங்கி, இருவரது படிப்புக்கும் உதவுவதாகத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்திலுள்ள முருகன் ஸ்தலங்களில் இத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுற்றுப்பிராகாரம் கட்டப்பட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சரியான பராமரிப்புப் பணிகள் செய்யாததாலேயே இந்தக் கட்டட விபத்து ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக விபத்து ஏற்பட்டது சாதாரண நாளாக இருந்ததால் பெரியளவிலான பக்தர்களின் கூட்டம் இல்லை. அரசு தாமதிக்காமல் புதிய சுற்றுப்பிராகார மண்டபத்தைக் கட்டி முடிக்க வேண்டும். இந்த விபத்தைக் காரணம்காட்டி, கடை அமைத்து வியாபாரம் செய்து வரும் 80-க்கும் மேற்பட்ட கடைகளை உடனடியாகக் காலி செய்ய திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளது. மண்டபம் கட்டி முடிக்கும் வரை இந்த வியாபாரிகளுக்குத் தற்காலிகமாகக் கடைகள் அமைக்க மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க.வுடன் இணைந்து பயணித்த ச.ம.க, இனி எங்களது கொள்கைகளை, மக்களைச் சுயமாக நேரடியாக சந்தித்து நியாயமான கருத்துகளை தெரிவித்து வருகிறோம். ராஜஸ்தானில் மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரியபாண்டியன் மீது நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து பலரும் பலவித கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். அச்சம்பவம் குறித்த முழுமையான விசாரணை அறிக்கை வெளிவரும் முன்னர் அதைப்பற்றி நான் கருத்து சொல்லவிரும்பவில்லை. ஆர்.கே.நகரில் தேர்தலை நியாயமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடத்த வேண்டும். ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலைச்சின்னம் கிடைத்திருப்பதால் ஆர்.கே.நகரில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதுபோலத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க