வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (18/12/2017)

கடைசி தொடர்பு:17:15 (18/12/2017)

சுங்கத்துறையினரை அதிரவைத்த 150 கிலோ கஞ்சா! ஒருவர் சிக்கினார்; 3 பேருக்கு வலை

இலங்கைக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சாவை ராமநாதபுரம் சுங்கத்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ள அவர்கள் மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.

சமீப காலமாகத் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருள்கள், மாத்திரைகள், கஞ்சா ஆகியவை கடத்துவது அதிகரித்து வருகிறது. மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் இருந்தும் அவற்றைப் பற்றி அச்சம் கொள்ளாத கடத்தல் ஆசாமிகள் தொடர்ச்சியாகக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கார்த்தி

இந்நிலையில், இன்று காலை ராமநாதபுரம் அருகே உள்ள நொச்சியூரணி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்லப்பட உள்ளதாக ராமநாதபுரம் சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா உதவி ஆணையர் ராஜ்குமார் மோசஸ் தலைமையிலான சுங்கத்துறையினர் நொச்சியூரணி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் சந்தேகப்படும் நிலையில் தென்பட்ட கார்த்தி என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கைக்கு கடத்துவதற்காகக் கஞ்சா கார்த்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கார்த்தி கூறிய இடத்திலிருந்து 150 கிலோ எடை கொண்ட கஞ்சா மூடைகளை சுங்கத்துறையினர் கைப்பற்றியதுடன் கார்த்தியையும் கைது செய்தனர். மேலும், இந்தக் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய 3 நபர்களைத் தேடி வருகின்றனர்.