வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (18/12/2017)

கடைசி தொடர்பு:18:50 (18/12/2017)

நாதுராம் மனைவியிடம் போலீஸ் விசாரணை... பெரியபாண்டியன் மரணத்தில் திடீர் திருப்பம்!

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் டீம்...

கை கொள்ளை மற்றும் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய நபராகத் தேடப்படுபவர் நாதுராம். நேற்று காலை அவரது மனைவி மஞ்சுவை ராஜஸ்தான் போலீஸார் கைதுசெய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த மாதம் 16-ம் தேதி சென்னை கொளத்தூரில் உள்ள முகேஷ்குமாருக்குச் சொந்தமான நகைக்கடையில், கொள்ளைக் கும்பல் ஒன்று நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றது. இதை விசாரிப்பதற்காகக் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், தலைமைக் காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் காவலர் சுதர்சன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் விரைந்தனர். அங்கு நாதுராமுக்கு நெருக்கமான கேளாராம், சென்னாராம், தன்வர்ஜி மற்றும் சங்கர்லால் ஆகியோரைக் கைதுசெய்து சென்னை கொண்டு வந்தனர். விசாரணையில், முக்கிய நபரான நாதுராம் மற்றும் அவரது நண்பர்கள் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர்கலா எனும் ஊரில் தலைமறைவாக இருக்கிறார்கள் எனத் தகவல் கிடைத்தது. இதனால் மீண்டும் தனிப்படை டீம் ராஜஸ்தான் சென்றது. நாதுராம் மற்றும் அவரது நண்பர்கள் செங்கல்சூளையில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின்படி கடந்த 13-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் தாக்குதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீஸாருக்கும் நாதுராம் கும்பலுக்கும் நடந்த இந்தச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் இன்ஸ்பெக்டர் முனிசேகரை, கடுமையாகத் தாக்கிவிட்டு நாதுராம் மற்றும் அவரது நண்பர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

நாதுராம்

இந்தச் சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ராஜஸ்தானையும் அதிரச் செய்தது. இதில் முக்கிய நபராகச் செயல்பட்ட நாதுராம் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிக்க இரு மாநில போலீஸார்களும் தீவிர முயற்சியில் இறங்கினர். சம்பவம் நடந்த இடத்துக்குட்பட்ட ஜெய்த்ரான் காவல் நிலையத்தில் அவர்கள்மீது கொலை உள்பட ஆறு வழக்குகள் பதிவு செய்து பாலி மாவட்ட எஸ்.பி தீபக் பார்க்கவ் விசாரித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி நாதுராமின் நண்பரான தினேஷ் சௌத்ரி, கொள்ளைக் கும்பலுக்கு உதவி செய்த தேஜாராம், அவரது மனைவி பிந்தியா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரையும் ஜெய்த்ரான் காவல் நிலைய போலீஸார்கள் கைதுசெய்து விசாரித்தனர். இந்தநிலையில், நேற்று (17-12-2017) காலை நாதுராமின் மனைவி மஞ்சுவைக் கைதுசெய்து ராஜஸ்தான் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் நாதுராமை பற்றிய திடுக்கிடும் தகவல்களைக் கூறியதாகத் தெரிகிறது. இதனை தொடர்ந்து நாதுராமை பிடிப்பதில் ராஜஸ்தான் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

பெரியபாண்டியன் மரணத்தில் மர்மம் :

தினேஷ் சௌத்ரிஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட அன்று, தாக்குதலில் நிலைகுலைந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்பெரியபாண்டியனின் துப்பாக்கியைவைத்தே கொள்ளைக் கும்பல் சுட்டுள்ளது என்று தனிப்படை டீம் கூறியது. பின்னர், அடுத்தடுத்த விசாரணையில் இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கிக் குண்டுதான் பெரியபாண்டியனின் உடலைத் துளைத்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது எனக் கூறப்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் முனிசேகர், ராஜஸ்தான் போலீஸாருக்கு எழுத்துபூர்வமாக தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "13-ம் தேதி அதிகாலை, கொள்ளைக் கும்பல் தங்கியிருந்த செங்கல்சூளைக்குச் சென்றோம். அங்கு மஞ்சு, தீபுராம் இருந்தார்கள். 'நாங்கள் போலீஸ்' என்று சொன்னோம். அப்போது அங்கிருந்த இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் இணைந்து எங்கள்மீது தாக்குதல் நடத்தினார்கள். அந்தச் சமயத்தில் என் துப்பாக்கி கீழே விழுந்துவிட்டது. தாக்குதலில் காயமடைந்த என்னை, மற்ற காவலர்கள் வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்துவிட்டனர். உள்ளே பெரியபாண்டியன் அந்தக் கும்பலுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது பெரியபாண்டியன் ரத்தவெள்ளத்தில் கிடந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கொலை சம்பவம் பற்றிப் பாலி மாவட்ட எஸ்.பி தீபக் நேற்று முன்தினம் அளித்த அறிக்கையில், "விபத்து அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கிக் குண்டு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனைத் துளைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்த அறிக்கையில், தாக்குதலில் தவறுதலாகப் பெரியபாண்டியன்மீது குண்டு பட்டுவிட்டதா அல்லது தவறுதலாக முனிசேகர் துப்பாக்கியின் ட்ரிக்கர் சொடுக்கப்பட்டதா என்பது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. மேலும், இந்தச் சம்பவம் பற்றி இருமாநில போலீஸாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  நாதுராமின் நண்பர்கள் மற்றும் அவரது மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான நாதுராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டால் மட்டுமே இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் மரணத்தில் இருக்கும் மர்மம் வெளிவரும்.


டிரெண்டிங் @ விகடன்