பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டார். 

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பதிவாளராக இருந்தவர் அங்கமுத்து. அவர் தன் பணிக் காலத்தில் இருந்தபோது பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட அலுவலர்களின் பணி நியமன கோப்புகள் காணாததால், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. அதையடுத்து பல்கலைக்கழகம் அங்கமுத்து மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை அவர் பெருந்துறை தோப்புபாளையத்தில் உள்ள தன்னுடைய வீட்டில், விஷ மாத்திரை சாப்பிட்டுள்ளார். அதையடுத்து அவரின் உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக அங்கமுத்து, கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இருந்தார். அந்தக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பணியாளர் முதல் பேராசிரியர்கள் வரை பலர் நியமிக்கப்பட்டார்கள். அந்த நியமனத்தில் பல முறைகேடுகள் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பணியாளர்களை இனச்சுழற்சி முறையில் நியமனம் செய்யவில்லை. தகுதியான ஆட்கள் தேர்வு செய்யவில்லை. போலிச் சான்றிதழ் கொடுத்து பலர் தேர்வாகி இருக்கிறார்கள். என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குளறுபடிகளை எப்போது வேண்டுமானாலும், தூசு தட்டி எடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். என்ற நிலை இருந்துவந்தது.

ஆனால், பதிவாளர் அங்கமுத்து, பணியிலிருந்து விடுபட்ட போதிலிருந்து, பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளைக்  காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது பல்கலைக்கழகத்தில் எழுந்தது. இந்தநிலையில்  கடந்த 16-ம் தேதி சேலம் சூரங்கலம் காவல் நிலையத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் அங்கமுத்து மீது புகார் கொடுத்தது. காவல்துறை அவர் மீது எஃப்.ஐ.ஆர் போடுவதாக இருந்தது. கவர்னர் வருகையையொட்டி, எஃப்.ஐ.ஆர். போடப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கு 10 பேர்  கலந்துகொள்ளும் நேர்முகத் தேர்வில் இவரும் கலந்துகொள்ள இருந்தது குறிப்பிடத் தக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் துணை வேந்தர் ஆவதற்கு அதிக வாய்ப்பும் இருந்தது. இந்தநிலையில், அங்கமுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!