வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (18/12/2017)

கடைசி தொடர்பு:17:41 (18/12/2017)

`நான்கு இட்லியைப் பிடுங்கித் தின்னும் காலம் வரப்போகிறது' - எச்சரிக்கும் சமுத்திரக்கனி

samuthirakani


"ஒருவன் வரும் காலத்தில் நான்கு இட்லி வைத்திருந்தால், அதைப் பிடுங்கித் தின்னும் காலம் வரப்போகிறது" என்று இயக்குநர் சமுத்திரக்கனி எச்சரித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியின் தூய்மை தூதுவர்கள் அறிமுக விழா ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி, நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து, ரேடியோ தொகுப்பாளர் ரமணா ஆகியோர் தூய்மைத் தூதுவர்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து தூய்மைத் தூதுவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

விழாவில் திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி பேசுகையில், ``நமக்குப் பிரச்னை என்றால் மட்டுமே நாம் சத்தம் போடும் காலம் போய் விட்டது. தற்போது எல்லோருக்கவும் குரல் கொடுக்க வேண்டிய அளவுக் குப்பைகள் நம்மை சூழ்ந்துவிட்டது. முன்பு நமது முன்னோர்கள் காலத்தில் நாம் பயன்படுத்திய பொருளின் எச்சத்தை வீட்டுக்குப் பின்னால் போட்டு, அந்தக் குப்பை உரமாக்கி வயலுக்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. வரும் காலத்தில் உணவுக்காகத்தான் உலகச் சண்டை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஒருவன் வரும் காலத்தில் நான்கு இட்லி வைத்திருந்தால், அதைப் பிடுங்கித் தின்னும் காலம் வரப்போகிறது. நம் முன்னோர் விட்டுச் சென்ற பல பொக்கிஷங்களை நாம் காணாமல் செய்துவிட்டோம், அதை மீட்க வேண்டும். அனைவரும் ஒன்று படுவோம் பாரம்பர்யத்தை மீட்போம்’' என்றார்.

விழாவில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தர் பேசும்போது, ``தூதுவர் என்பது சாதாரண விஷயம் இல்லை. நம் முன்னோர் காலத்தில் இலக்கியக் கூற்றுபடி முதல் தூதுவராக ஔவையார் இருந்துள்ளார். பாண்டவர்களுக்கு கண்ணபிரான் தூது சென்றார். ராமனுக்கு அநுமன் தூது சென்றார். அதுபோல இன்று மதுரையின் தூய்மைக்கு நான் உட்பட நான்கு நல்ல தூதுவர்களை நியமித்துள்ளனர், மற்ற ஊருக்கும் மதுரைக்கும் வித்தியாசம் உண்டு. மற்ற ஊர்களில் தெய்வங்கள் பற்றிய குறிப்பீடுகளிலும் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பற்றியும் கூறும்போது இந்த ஊருக்கு வந்தனர், நடந்து சென்றனர் என்றுதான் இருக்கும். ஆனால், மதுரை மண்ணைத்தான் சிவபெருமான் தலையில் சுமந்தார் என்று உள்ளது. இப்படி உயர்ந்த மதுரை மண்ணைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் நடக்கும். அதுபோல இந்த நிகழ்வு இல்லாமல் தூய்மைப் பணி, தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்’' என்றார்.