`5 ரூபாய் கட்டணத்தை ஒரு ரூபாய் ஆக்குங்கள்' - கலெக்டரிடம் சென்ற புகார்

 

மதுரை மாநகரில் அதிகமாக மக்கள் கூடும் பேருந்து நிலையங்களாகப் பார்க்கப்படும் எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம், பெரியார் பேருந்துநிலையம், ஆரப்பாளையம் பேருந்துநிலையம், அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்துவந்தது. 

கழிப்பறைக் கட்டணங்களைக் குறைத்து, அவற்றை முறைப்படுத்தக்கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சார்ந்த ஜெகநேசன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதுகுறித்து ஜெகநேசனிடம் பேசியபோது, "மதுரையைச் சுத்தமாக மாற்ற வேண்டும் என அரசு சார்பாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், கழிப்பறைகள்கூட இலவசமாக இல்லை. இதனால், திறந்தவெளியையே மக்கள் கழிப்பறைகளாகப் பயன்படுத்துகின்றனர். இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. மதுரையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள், மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், ஏன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழிப்பறைக்குக்கூட 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். இதனால், பயணிகளும் பொதுமக்களும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே, கழிப்பறை கட்டணத்தை ஒரு ரூபாயாக மாற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். அதிக பணம் வசூலிக்கும் முறையைக் கட்டுப்படுத்த பில் முறையைக் கையாள வேண்டும். அப்போதுதான் மதுரையைச் சுகாதாரமான நகரமாக மாற்ற முடியும். பொதுமக்களின் அடிப்படைப் பிரச்னைகள் குறையும்’’ என்றார் ஆதங்கத்துடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!