``ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன் தன்னைத் திருத்திக் கொள்ளட்டும்” - கிரண்பேடிக்கு நாராயணசாமி பதிலடி | Narayansamy replies to Kiran Bedi comments

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (18/12/2017)

கடைசி தொடர்பு:16:07 (23/07/2018)

``ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன் தன்னைத் திருத்திக் கொள்ளட்டும்” - கிரண்பேடிக்கு நாராயணசாமி பதிலடி

`'ஆளுநர்கள் மாநிலங்களில் ஆய்வு செய்யலாம் என்று எந்த அரசியல் சட்ட விதிமுறைகளிலும் இல்லை” என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி

 

``அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி இருக்கிறது” என்று ஒரு அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் அளவுக்கு அண்மைக் காலமாகக் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது புதுச்சேரி. அதுகுறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, “ஆளுநர் தொடங்கி அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரை விமானப் பயணங்களில் உயர் வகுப்பில் செல்லக் கூடாது. தற்போது ஒவ்வொரு ரூபாயையும் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது மக்கள் பணம் என்பதால் உயர் வகுப்பைத் தவிர்த்துவிட்டு, சாதாரண வகுப்புகளில்தான் செல்ல வேண்டும்” என்று உத்தரவுப் பிறப்பித்திருந்தார். கிரண்பேடியின் இந்த உத்தரவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதையடுத்து, ராகுல்காந்தி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்றிருந்த முதல்வர் நாராயணசாமி இன்று புதுச்சேரிக்குத் திரும்பும்போது சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, “புதுச்சேரியைச் சேர்ந்த அமைச்சர்கள் விமானங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக முதல் வகுப்பில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி கூறியிருக்கிறார். அது அவரது வேலை இல்லை. விமானத்தில் பயணம் செய்வதால் மட்டுமே நிதி நிலைமை மோசமடைந்துவிடாது. புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பணிக்காக ஒதுக்கப்பட்ட அதிகாரிகள் 22 பேர்தான். ஆனால், இவர் வந்த பிறகு தேவைக்கு அதிகமாக பிற துறைகளின் அதிகாரிகளை அழைத்து ஆளுநர் மாளிகையில் பணியமர்த்திக் கொண்டதால் தற்போது அங்கு 64 அதிகாரிகள் இருக்கிறார்கள்.

தேவைக்கு அதிகமாக ஆளுநர் மாளிகையில் குவித்து வைத்திருக்கும் அதிகாரிகளை விடுவித்து, அவரவர்களின் துறைக்கு அனுப்பிவிட்டாலே புதுச்சேரியின் நிதி நிலைமை ஓரளவுக்குச் சரியாகும். ஊருக்கு உபதேசம் சொல்லும் முன் ஆளுநர் கிரண்பேடி தன்னைத் திருத்திக்கொள்ளட்டும். அதைச் செய்யாமல் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கச் சொல்வது முறையானது அல்ல. புதுச்சேரியில் நிதிநிலை சரியில்லை என்றால், அதை எப்படிச் சீரமைப்பது என்பது மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்குத் தெரியும். அதற்காக ஆளுநர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆளுநர்கள் மாநிலங்களில் ஆய்வு செய்யலாம் என்று எந்த அரசியல் சட்ட விதிமுறைகளிலும் இல்லை. அதேசமயம் துணைநிலை ஆளுநருக்கு மட்டும் ஓர் அதிகாரம் கூடுதலாக உள்ளது. முக்கிய கோப்புகளைக் கையாளுவதில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், இறுதி முடிவு எடுப்பதற்காக அந்தக் கோப்பைக் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி வைக்கலாம். ஆனால், தமிழகம் போன்ற மாநிலங்களின் ஆளுநர்களுக்கு அந்த அதிகாரம்கூட இல்லை” என்றார் ஆவேசமாக.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க