வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (18/12/2017)

கடைசி தொடர்பு:20:15 (18/12/2017)

சேலத்திலும் ஆய்வு! கலெக்டர் ரோகிணியுடன் சேர்ந்து தெருவைச் சுத்தம் செய்தார் ஆளுநர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சேலம் மாவட்டத்தில் ஆய்வுப் பணிக்காக இன்று காலை 5 மணிக்கு சேலம் எஸ்பிரஸ் ரயிலில்  வந்திருந்தார். கடலூரில் நடந்த சர்ச்சைகள்போல சேலத்தில் ஏதாவது நடந்துவிடக் கூடாது என்பதற்காகக் காவல்துறையினர் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள். ஆளுநரோடு சேலம் கலெக்டர் ரோஹிணியும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

சேலம் வந்திறங்கிய ஆளுநர் அஸ்தம்பட்டி பயணியர் மாளிகையில் தங்கினார். பிறகு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய சமூக அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டார். ஓமலூர் திண்டமங்கலம் கிராமத்துக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அங்கு ஊரக வளர்ச்சித்துறை மூலமாக வைக்கப்பட்டிருந்த புகைப்படை கண்காட்சியைப் பார்வையிட்டார். தூய்மை பாரதம் உறுப்பினர்கள்  பேரணியைக் கொடி அசைத்தும் கைக்காட்டியும் தொடக்கிவைத்தார்.

பிறகு, அங்கிருந்த சித்ரா சின்ராஜ் வீட்டுக்குச் சென்று தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டிருந்த கழிப்பிடத்தைத் திறந்து பார்த்து விட்டு சித்ராவிடம் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார். அதன் பிறகு அங்கிருந்த அங்கன்வாடிக்குள் சென்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். குழந்தைகள் ஆளுநரை ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்றார்கள். பதிலுக்கு ஆளுநர் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து ''நன்றாகப் படிக்க வேண்டும்'' என்றார்.

துடப்பத்தை எடுத்து தெருவைக் கூட்டுவதுபோல போஸ் கொடுத்துவிட்டுத் திண்டமங்கலம் பஞ்சாயத்தில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை பார்வையிட்டு முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவத்தைப் பாராட்டினார். பரமசிவம், ''எங்க பஞ்சாயத்து ஜனாதிபதி விருது உட்பட 3 விருதுகள் பெற்றிருக்கிறது'' என்றார். சிறந்த பஞ்சாயத்தாகத் திகழ்வதைப் பார்த்துப் பாராட்டிய ஆளுநர், இந்தப் பஞ்சாயத்தைப்போல மற்ற மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகளும் செயல்படப் பரிந்துரை செய்வதாகச் சொன்னார்'' என்றார்.

அதன் பிறகு, சேலம் புதிய பேருந்து நிலையத்தைப் பார்வையிட்டார். தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் அடையாளக் கறுப்புக்கொடி காட்டும் நிகழ்ச்சியாகச் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தினார்கள்.